யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாய்த்தர்க்கம் காரணமாகக் கூட்டம் பெரும் அமளியில் நிறைவடைந்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் இணைத்தலைவரான வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டத்தில் நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணியை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நெடுந்தீவுப் பிரதேச செயலாளர், “நெடுந்தீவில் உள்ள குயிக் ரவர் பகுதிக்கு அருகே இருந்த கடற்படையினரால் இந்த நிலம் கோரப்பட்டது. இது குறித்துப் பிரதேச காணிப் பயன்பாட்டுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டு, மாவட்டக் குழுவிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளரின் பதிலைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “மக்கள் பிரதிநிதிகள் எவரும் இல்லாத நிலையிலேயே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இராணுவத்தினரை ஒரு இலட்சமாகவும், கடற்படையினரை 20 ஆயிரமாகவும் குறைப்போம் என்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால், யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும் படையினர் தொடர்ந்து காணிகளைத் தமதாக்கி வருகின்றனர். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இதுவே நிலைமையாக உள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
இதன்போது, வடமராட்சி கிழக்கு மீனவர் சங்கப் பிரதிநிதி ஒருவர், “கடந்த ஆட்சிக் காலத்தில் நீங்கள் எங்கே போனீர்கள்?” எனத் தனக்குத் தொடர்புபடாத ஒரு கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் தெற்கு ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கடும் தொனியில் தமது கருத்துக்களை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டத்தில் பிரதேச சபையின் தவிசாளரும் கலந்துகொண்டார் எனப் பிரதேச செயலாளர் கூறியபோது, சம்பந்தப்பட்ட தவிசாளர் அதனைத் திட்டவட்டமாக மறுத்துரைத்தார்.
இதன் காரணமாக, அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, நெடுந்தீவு பிரதேச காணிப் பயன்பாட்டுக் குழுவின் அறிக்கை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட அறிக்கை என்பன கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.
மறுபுறம், இந்த விவாதத்தின் போது குறுக்கிட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், “இன்றைய சூழலில் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் படையினர் தேவையாக உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., “மக்களின் பாதுகாப்பு என்பது பொலிஸாருக்குரிய விடயம். அதற்காக எவ்வளவு பொலிஸாரை வேண்டுமானாலும் பணியில் அமர்த்துங்கள். ஆனால், அதனைக் காரணம்காட்டிப் படையினருக்கு நிலங்களை வழங்க முடியாது” என்று தெரிவித்தார்.
இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்தத் தொடர் விவாதங்கள் மற்றும் கடுமையான வாக்குவாதங்கள் காரணமாகக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், கூட்டம் அமளியுடன் நிறைவடைந்தது.










