நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வனாத்தவில்லுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மைலங்குளம் விகாரை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியின் இடதுபுறமிருந்த கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது சாரதி உழவு இயந்திரத்தின் கீழ் சிக்குண்டுள்ளார். விபத்தில் காயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வனாத்தவில்லுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸமஹாராம – கிரிந்த வீதியின் மஹாஜன சந்திக்கு அருகில், இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திஸ்ஸமஹாராம நோக்கி பயணித்த கேப் ரக வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, கடையொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த கேப் வாகனத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த மூவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹொரனை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










