நாட்டில் தற்போது நிலவி வரும் பலத்த மழைவீழ்ச்சியினால் களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (12) வெள்ளிக்கிழமை அதிகாலை 4:00 மணி முதல் நாளை (13) சனிக்கிழமை அதிகாலை 4:00 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு முதாலம் நிலை (மஞ்சள் நிற எச்சரிக்கை) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
களுத்துறை மாவட்டம்
பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவு.
கண்டி மாவட்டம்
தொழுவை பிரதேச செயலகப் பிரிவு.
இரத்தினபுரி மாவட்டம்:
பெல்மடுல்ல, அயகம, இரத்தினபுரி, கொடகவெல, கலவானை மற்றும் நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
நுவரெலியா மாவட்டம்
அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவு.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிக்கும் மக்கள், நிலத்தில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல், ஊற்றுகள் திடீரெனத் தோன்றுதல் அல்லது வற்றிப்போதல் போன்ற ஏதேனும் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.










