ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒரு தம்பதியினரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரி றபாய்டீனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமைய இந்நடவடிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) மாலை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த சம்பவத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதிகள் தவிர்ந்த மற்றுமொருவருவரும் கைதாகியுள்ளார்.
இவர் ஒரு பல்கலைக்கழக மாணவர்(வயது-23) என குறிப்பிட்டுள்ள பொலிஸார் அம்மாணவன் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் ரூபா 12000 செலவு செய்து ஐஸ் போதைப்பொருளை மேற்குறித்த தம்பதிகளினூடாக பெற வந்தவர் என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் எனும் பகுதியில் சொந்த இடமாக கொண்ட இத்தம்பதி தோட்டவேலை என்ற போர்வையில் 6 மாத காலமாக சம்மாந்துறை பகுதி 40 வீட்டுத்திட்டத்தில் ஐஸ் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இது தவிர 34, 42 வயதுடய இத்தம்பதிகள் 3 மாத காலமாக நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் எனும் பகுதியில் வீடு ஒன்றினை பெற்று தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து தனியார் வங்கி ஊடாக ரூபா 10000 ஐ பெற்றுக்கொண்டு வாடிக்கையாக குறித்த போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் கைத்தொலைபேசிகள் 2 கிராம் 220 மில்லி கிராம் 500 மில்லி கிராம் 750 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் வங்கி புத்தகம் பணம் செலுத்திய வங்கி சிட்டு என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கைத்தொலைபேசிக்கு வங்கியில் வைப்பிலிடப்படும் பணம் மற்றும் வைக்கும் நபர்களின் விபரங்கள் குறுஞ்செய்தியாக தம்பதியினரின் கையடக்க தொலைபேசிக்கு வந்தவுடன் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடியாக விநியோகிக்கப்படும்.
அத்துடன் இச்சம்பவத்தில் கைதான தம்பதியினர் உட்பட மற்றுமொருவர் சட்ட நடவடிக்கைகாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை நீதிவான் கணவன் மற்றுமொரு சந்தேக நபரான மாணவனுக்கு தலா ரூபா 9000 தண்டப்பணமும் பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவும் பிறப்பித்து வழக்கினை மறுதவணை இட்டு ஒத்திவைத்தார்.










