இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்க ஆதரவுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை, லெபனானின் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் ஈரான் ஆதரவு குழுவின் தலைவர் நயீம் காசிம் (Naim Qassem) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேச்சுவார்த்தைகள் லெபனானுக்கு பயனற்றதாகவும், அவமானகரமானதாகவும் இருந்ததாகவும், மேலும் லெபனான் மக்களின் பரந்த பிரிவினரால் திட்டவட்டமாக அவை நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இந்த அறிவிப்பானது தெஹ்ரானுடன் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு மோதலை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
வொஷிங்டனுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தம் செய்துகொள்வதற்கும் லெபனானில் போர் நிறுத்தம் செய்வதை ஈரான் ஒரு நிபந்தனையாக வைத்துள்ளது.
மேலும், இஸ்ரேல் அங்குத் தாக்குதல்களைத் தொடர்ந்தால், நேரடியாகத் தலையிடக்கூடும் என்றும் அண்மைக்காலங்களில் ஈரான் சூசகமாக எச்சரித்துள்ளது.
இருப்பினும், மோதலை நிறுத்துவதற்காக இஸ்ரேலுக்கும் லெபனான் அரசாங்கத்திற்கும் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் நிராகரித்தார்.
இது குறித்து இஸ்ரேல், லெபனான் அல்லது அமெரிக்காவிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.










