இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, நீண்டகாலமாக அவருக்கு இருந்துவரும் காயம் ஒன்றிலிருந்து முழுமையாகக் குணமடைவதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பெத்தும் நிஸ்ஸங்க, சர்வதேச போட்டிகள் மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட தொடர்களில் கடந்த ஒரு வருட காலமாகத் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான LPL வீரர்கள் ஏலத்திற்குத் தகுதி பெற்றிருந்த போதிலும், நேரடி ஒப்பந்தங்கள் மூலம் அவர் எந்தவொரு அணியிலும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில், 28 வயதான இவர் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும், இந்த இடைவெளிக் காலத்தைப் பயன்படுத்தி முறையான சிகிச்சை மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார் என்றும் அவரது முகாமைத்துவம் அறிவித்துள்ளது.










