இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகூடிய மூலதனச் செலவினங்களைக் கொண்ட ஆண்டாக அடுத்த வருடத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுமார் 1,744.85 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் அமையவுள்ள அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கடந்த 2022, 2023ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் திறைசேரியின் வங்கி மேலதிகப் பற்று 800 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டதுடன், திறைசேரி கடுமையான கடனிலேயே செயற்பட்டது.
ஆனால், எமது அரசின் மிகச் சிறந்த நிதி முகாமைத்துவத்தின் காரணமாக, இன்று நேர்மறை வைப்புத்தொகையுடன் திறைசேரியை முன்னோக்கிக் கொண்டுசெல்ல எம்மால் முடிந்துள்ளது.
இதன் காரணமாகவே, கிராமப்புற மக்களின் அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைத் தங்குதடையின்றி எம்மால் வழங்க முடிகின்றது.
அடுத்த வருட மூலதனச் செலவினங்களுக்காக 2 ஆயிரம் பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.” – என்றார்.
திட்டங்களின் தாமதத்தால் ஏற்படும் நட்டங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார்.
“அரசாக நாம் எதிர்நோக்கியுள்ள பிரதான சவால், ஒதுக்கப்படும் நிதியை அந்தந்த நிதியாண்டுக்குள் முறையாகச் செலவழித்து முடிப்பதாகும்.
நான் அண்மையில் கோரியிருந்த அறிக்கை ஒன்றின்படி, தாமதங்கள் காரணமாக 300 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டிருந்த சில திட்டங்களுக்கு 600 பில்லியன் ரூபா வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலதாமதத்தால் ஏற்பட்ட இந்த இரட்டிப்புச் செலவு என்பது, அதுபோன்ற இன்னும் பல புதிய திட்டங்களைச் செய்யக்கூடிய அளவிலான பெரும் தொகையாகும்.
அம்பாறை மாவட்டத்தின் வீதிகள், பாலங்கள், கால்வாய்கள் மற்றும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக 2026ஆம் ஆண்டுக்கு மட்டும் 22 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை முறையாக முகாமைத்துவம் செய்து, திட்டமிட்ட பணிகளை இந்த ஆண்டுக்குள்ளேயே முடித்து மக்களுக்குப் பலன்களை வழங்குவது அரச அதிகாரிகளின் கட்டாயப் பொறுப்பாகும்.” – என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அண்மையில் அனைத்து மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகச் சந்தித்து, அடிமட்டத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்துள்ளார் என்றும், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அம்பாறை நகர சபைக்குச் சேவைகளைப் பெற வரும் மக்களின் வசதிகளை மேம்படுத்தவும், வர்த்தக சமூகம் முறையானதொரு இடத்தில் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவும், மாவட்ட மக்களின் கலாசார வாழ்க்கையை வளர்க்கவும் இந்த நவீன பலநோக்குக் கட்டடம் நிர்மாணிக்கப்படுகின்றது.
70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருந்த மக்களின் தேவையாக இது காணப்பட்டது.
இதன் கட்டுமானப் பணிகள் 2028 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
பல வருடங்களாக அம்பாறை நகர சபையின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் தூய்மைப் பணியாளராக (தொழிலாளராக) அங்கு கடமையாற்றி வரும் ஈ. டி. ஹேமச்சந்திர என்ற ஊழியர் இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து ஒரு விசேட அதிதியாகக் கலந்துகொண்டமை அனைவரினதும் பாராட்டைப் பெற்றது.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்க, அம்பாறை நகரபிதா இந்திக விஜேவிக்ரம, மாகாண பிரதம செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் அனூபம மங்கள விக்ரமாரச்சி உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.










