ஒன்பது வருடங்களுக்கு பின்னர் கத்தோலிக்க திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் கல்வி அமைச்சின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், கத்தோலிக்க மதத்தைப் போதிப்பதற்கான ஆசிரியர் பணியாடல் முறைமையொன்றை உருவாக்குவது குறித்தும், ஆசிரியர் சேவைக்காக கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் அருட்சகோதரிகளை இணைத்துக்கொள்வதன் அவசியம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையுடனான இத்தகைய கலந்துரையாடல்களை வருடத்திற்கு மூன்று முறை நடத்துவதற்கும், இதற்கான செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகேவை நியமிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட ஆயர்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மதகுருமார்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தத்தமது மதத்தைக் கற்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதும், கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதுமே தனது எதிர்பார்ப்பு என கர்தினால் மெல்கம் ரஞ்சித் இங்கு மேலும் வலியுறுத்தியதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










