“ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், அவரது இல்லம் மற்றும் அவர் மரணமடைந்த இல்லம் ஆகிய இரண்டிலும் இருந்த “CCTV”அமைப்புகள் இயங்கிய போதிலும், அவற்றில் தரவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை.” – என்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த விவரங்களைச் சமர்ப்பித்தனர்.
கபில சந்திரசேன மரணமடைந்த இடமான முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லம் மற்றும் மரணமடைந்தவரின் சொந்த இல்லம் ஆகிய இரண்டினதும் “CCTV” அமைப்புகள் இயங்கியுள்ளன. எனினும், திட்டமிட்டபடி தரவுகள் எதுவும் சேமிக்கப்படாமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, அந்த இரண்டு “CCTV”அமைப்புகளினதும் டி.வி.ஆர். இயந்திரங்களைச் சான்றுப்பொருட்களாக நீதிமன்றில் சமர்ப்பிக்கவும், அவற்றை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி விசேட அறிக்கை பெறுவதற்கும் நீதிவானிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் உத்தரவைக் கோரி நின்றனர். இது குறித்துச் சாட்சியமளிக்க,”CCTV” அமைப்பைப் பொருத்திய பொறியியலாளரும் நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தார்.
நீதிமன்றில் மேலும் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், “கபில சந்திரசேன மரணமடைந்த அரவிந்த டி சில்வாவின் வீட்டின் தரைத்தளத்தின் ஊடாகவும், வாகனங்களை நிறுத்தும் கீழ் தரைத்தளத்தின் இரண்டு இடங்களில் இருந்தும் வீட்டுக்குள் செல்வதற்கு மேலும் இரண்டு பிரத்தியேக வழிகள் இருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், கடந்த 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த வழிகளினூடாக எந்தவொரு நபரும் சென்றதற்கான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை” என்று தெரிவித்தனர்.
கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முன்னர் தொடர்புகொண்ட தொலைபேசி தரவு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மேலதிக கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. கபில சந்திரசேனவுக்குப் பிணை பெற்றுக்கொள்வது தொடர்பாக அன்றைய தினம் சட்டத்தரணியைச் சந்திக்கச் சென்ற பிணையாளர்களிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை. அவர்கள் தற்போது வேறு விவகாரத்தில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தன்னிடம் இருந்து விசேட உத்தரவைப் பெற்று, விளக்கமறியலில் உள்ள அந்தச் சாட்சிகளிடம் சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீதிவான் இதன்போது சுட்டிக்காட்டினார். இது குறித்து நகர்த்தல் பத்திரம் மூலம் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்துவதாகப் பொலிஸார் அறிவித்தனர். முன்னாள் ஏர்லைன்ஸ் பிரதானியின் மரணத்தில் சிசிரிவி காட்சிகள் மாயமாகியுள்ள விவகாரம் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










