காலநிலை அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையிலான ‘யாழ் தேவி’ ரயில் சேவை, நான்கு மாத இடைவேளைக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.40 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட யாழ் தேவி ரயில், பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தச் சேவை ஆரம்பமானதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரயிலில் பயணிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
யாழ் தேவி ரயிலின் வாராந்த பயண நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய கொழும்பு, கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ் தேவி பயணிக்கும்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ் தேவி பயணிக்கும்.
யாழ் தேவி ரயிலானது குளிரூட்டப்பட்ட நான்கு முதல் வகுப்புப் பெட்டிகளைக் கொண்டது. இதில் பயணிகளுக்கான இருக்கைகளை முன்கூட்டியே பதிவு செய்யும் வசதிகளும் ரயில்வே திணைக்களத்தால் செய்யப்பட்டுள்ளன.
வட பகுதிக்கும் தலைநகருக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்பை வலுப்படுத்தும் இந்த ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.












