மக்களின் அவசிய தேவை கருதி யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பது தொடர்பில் யாழ் மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை இருதரப்பும் இணைந்து பேசி மக்கள் நலன் சார்ந்து தீர்வைக் காண முன்வரவேண்டும் என யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இரு தரப்பினருக்கும் இடையே குறித்த விவகாரம் இழுபறியாக நீடித்துவருவதால் நாளாந்தம் பல்லாயிரக் கணக்கில் வரும் மக்களின் தேவை கருதிய அவசிய திட்டமான இந்த மலசலகூட கட்டட தொகுதி இன்னமும் பாவனைக்கு விடமுடியாத நிலையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த விவகாரம் குறித்து யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் மேலும் கூறுகையில் –
குறித்த மலசலகூட கட்டடத் தொகுதியானது பல்வேறு தரப்பினரது கோரிக்கையின் அடிப்படையில் கடந்த எமது ஆட்சிக் காலத்தில் இந்த பொது மலசலகூட கட்டட நிர்மாணத்துக்காக யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் திட்ட முன்மொழிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் அன்று வழங்கப்பட்டிருந்தது.
யாழ் மாநகரின் முழுமையான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த மலசலகூடத் தொகுதியை கடந்த மாதம் குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பத்தை யாழ் மாநகரசபை ஊடகங்கள் வாயிலாக கோரி இருந்தது.
இந்நிலையில் இ.போ.சவினர் குத்தகை வழங்கலை தன்னிச்சையாக மாநகரசபை கோரியுள்ளதாக கூறியதை அடுத்து இந்த இழுபறி உருவாகியுள்ளது.
இதே நேரம் இரு சபைகளும் மக்களுக்கான சேவையை முன்னெடுக்கும் சபைகளாக இருக்கும் நிலையில் இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த விடயத்தில் இழுபறிப்படுவது ஆரோக்கியமானதாக இருக்காதென்றே நாம் எண்ணுகின்றோம்.
கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி யாழ் மாநகரை ஆட்சி செய்த காலப் பகுதியில் யாழ் பேருந்து நிலைய சூழலில் மக்களுக்கான வாழ்வாதார நோக்குடன் பழங்களை விற்பதற்கான கடைகளை, மாநகரசபை மற்றும் இ.போ.ச ஆகியன வருமான வசூலிப்பை பகிர்ந்து கொள்ளும் வகையில் இரு தரப்பினரது இணக்கப்பாட்டுடன் வழங்கப்பட்டு இன்றும் அது செயற்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இவ் விடயத்திலும் குறித்த இரு தரப்பினரும் கலந்துரையாடி மக்களின் நலன்களுக்காகவும் குறித்த மலசல கூட தொகுதி அமைக்கப்பட்டதன் நோக்கத்தை கருதியும் சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதுவே ஆரோக்கியமானதும் கூட என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










