இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்மட்ட வளிமண்டலக் கோளாறு காரணமாக, நாட்டில் நிலவும் மழைப்பொழிவு நிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சீற்றம் லேசானது முதல் மிதமானது வரை இருக்கலாம். இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்றுடன் கூடிய சூறாவளிக் காற்றும், மிகவும் கொந்தளிப்பான கடல் நிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.










