‘நாம் நீலகாமம்’ பிரகடனத்தைத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று சபையில் சமர்ப்பித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு சமர்ப்பித்தார். நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவத்துக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் நேற்று அறவழிப் போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே இன்று பிரகடனம் அதிஉயர் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
“இராணுவத்தில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பெருந்தோட்டப் பகுதிகளில் கூலிப்படையை உருவாக்க முடியாது. அது தடை செய்யப்பட வேண்டும். தோட்டங்களில் பயிரிடப்படாத தரிசு நிலங்களில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்” என்றும் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
மலையக மக்களுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட ஹட்டன் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுமாறும் அவர் இடித்துரைத்தார்.
மலையக மக்களுக்குக் காணி உரிமை தராமல், ஏனையோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமானால் தமிழ் முற்போக்குக் கூட்டணி நிச்சயம் போராடும் என்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.










