கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மலைக மக்களுக்காக அரசாங்கம் நிறைய செய்து வருகிறது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று மே 05 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
முன்னர் பலர் அந்த மக்களை ஏமாற்றி, அவர்களின் அடிப்படை ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை என்பதை நினைவு கூர்ந்த அமைச்சர், தற்போதைய அரசாங்கம் அவர்களின் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளது என்று வலியுறுத்தினார்.
மலையக மக்களுக்கு இந்த ஊதியங்களை வழங்குவதை எதிர்க்கட்சிகள் எதிர்த்ததை நினைவு கூர்ந்த அமைச்சர், தற்போதைய அரசாங்கம் அவர்களுக்குக் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றை வழங்குவதற்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அந்த மக்களின் வாழ்க்கையைத் தாம் புரிந்துகொள்வதாகவும், அவர்கள் பல நூற்றாண்டுகளாகக் கடுமையான அநீதிக்கு ஆளாகி வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்குப் பல்வேறு அமைச்சு மட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், கல்வி விடயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் மிகவும் உணர்வுடன் இருப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.










