நாட்டில் நெடுந்தூர பேருந்துப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இலகுவான முறையில் இருக்கைகளை முன்பதிவு செய்வதற்காக புதிய முன்னோடித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இன்று மே 04 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் அன்றாடப் போக்குவரத்திற்கு தொடருந்துகளைக் காட்டிலும் பேருந்துகளே கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றன.இருப்பினும், பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய பேருந்து நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருப்பதால், பயணத் திட்டமிடல் கடினமாகி, பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்த திட்டம், பயணிகள் முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்யவும், தங்களது பயணங்களை மேலும் இலகுவாக திட்டமிடவும் உதவுவதோடு அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும்.
குறித்த திட்டம், ஆரம்பத்தில் தனியார் பேருந்து நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும், பின்னர் இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பின் வெற்றியைப் பொறுத்து, நாடு முழுவதும் இதை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.










