இராஜகிரிய பகுதியில் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 120 பேரில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்து சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த மோசடி வியாபாரத்தை அவர்கள் முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.டி. ஜனக முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.










