வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகின.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஏற்கனவே அயல் வீட்டு இளைஞருக்கும் குறித்த பெண்ணின் குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு காணப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்றையதினம் வேலை முடிந்து வந்தவேளை அவரை வழிமறித்து அவரது துவிச்சக்கர வண்டியை குறித்த இளைஞன் பறித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் தனது மனைவிக்கு கூறிய நிலையில் மனைவி குறித்த இளைஞனுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதன்போது குறித்த இளைஞன் அந்த பெண் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளார்.
வாள்வெட்டில் படுகாயமடைந்த பெண், நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










