திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள புனித நிலப்பகுதிகள் ஆலயத்துக்கே சொந்தமானவை என உறுதிப்படுத்தக் கோரி, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 29ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருக்கோணேஸ்வரர் ஆலய நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தலைமையிலான நிர்வாக சபையினரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மூலம் பின்வரும் நிலப்பகுதிகள் திருக்கோணேஸ்வர ஆலயத்துக்குச் சொந்தமானவை என வெளிப்படுத்தவும், அவற்றுக்கான பாரதீனப்படுத்தல் கட்டளையை ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு வழங்கவும் கோரப்பட்டுள்ளது.
* திருக்கோணேஸ்வரர் ஆலயம் மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர் 1 ரூட் 29 பேர்ச்சஸ் காணித்துண்டு.
* பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 3 ஏக்கர் 2 ரூட் 1 பேர்ச்சஸ் காணித்துண்டு.
* கோட்டைவாசல் பிள்ளையார் அமைப்புள்ள 26 பேர்ச்சஸ் நிலப்பகுதி.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை காலத்துக்குக் காலம் இடம்பெற்று வரும் பல்வேறு அரச கெடுபிடிகள், தொல்பொருள் திணைக்களத்தின் தடைகள் மற்றும் அத்துமீறிய நிலக் கையகப்படுத்தல்களைக் கட்டுப்படுத்துவதே இந்த வழக்கின் பிரதான நோக்கமாகும் என்று ஆலயத் தலைவர் தெரிவித்தார்.
இதன் மூலம் ஆலயத்தின் இராஜகோபுரக் கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்திப் பணிகளை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.










