யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக நீடித்து வரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று இராணுவத்தின் கொமாண்டர்ஸ் பங்களா முன்பாகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்தும் அப்பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதிகள் இன்னும் உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகின்றன.தமது காணிகளை விடுவிக்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வரும் உரிமையாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாகவே நேற்றும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.போராட்ட இடத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதியுடன் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.










