மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் இன்று (02.05.2026) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் 54 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திக்கோடை, சுரவணையடியூற்று பகுதியைச் சேர்ந்த தயானந்தராஜா வசந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தாயான இவர், இன்று அதிகாலை வீட்டுவளவில் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து வெளியே வந்தபோது, அங்கு நுழைந்திருந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தத் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போரதீவுப்பற்று எல்லைப் பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் அத்துமீறல் அதிகரித்து வருவதால், இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.










