இலங்கையில் ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்படுகின்றது என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடையில் நடைபெற்ற தனியார் வைத்தியசாலை திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், மருத்துவப் பீடத்தில் கல்வி கற்று வெளியேறும் ஒரே ஒரு வைத்தியருக்காக அரசாங்கம் பெரும் செலவினை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.
ஒரு பொறியியலாளரை உருவாக்க சுமார் 30 இலட்சம் ரூபா செலவிடப்படுவதுடன், அதற்கு இரட்டிப்பாக வைத்தியர்களுக்காக செலவிடப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.இலவச சுகாதாரச் சேவையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதையும், ஒருவரின் உயிர் அவரின் பணநிலைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் சுமார் 35,000 முதல் 38,000 வரை வைத்தியர்கள் உள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் அரசு வைத்தியசாலைகளில் பணியாற்றுகின்றனர் என்றும், சமூகத்திற்கான அவர்களின் பொறுப்பு மிக முக்கியமானதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.










