சர்வ வல்லமையுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தன் உயிரை அர்ப்பணித்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு, அவரது பாடுகளை நினைவுகூரும் விசேட பாதயாத்திரை மற்றும் ஆராதனை நிகழ்வு கொழும்பில் விமரிசையாக நடைபெற்றது.
“இயேசு ஜீவிக்கிறார்” சர்வதேச சுவிசேஷ பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கொழும்பு 14 ஆமர் வீதியில் அமைந்துள்ள பெர்னாந்து பிளேசில் பிற்பகல் 3:00 மணியளவில் ஆரம்பமானது.
திரளான இறை மக்கள் பக்தியுடன் கலந்து கொண்ட இந்த பாதயாத்திரை, மருதானை வழியாக பயணித்து கொழும்பு ஹயிட் பார்க் மைதானத்தை சென்றடைந்தது.பின்னர் நடைபெற்ற விசேட ஆராதனையில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பும் மனிதகுலத்திற்கு அவர் வழங்கிய மன்னிப்பும் தியானிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளை கலாநிதி M.R. இராஜேந்திரம் மற்றும் C.V. இராஜேந்திரம் ஆகியோர் முன்னின்று வழிநடத்தினர்.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், ஒருமித்த மனதுடன் ஆராதனை நடத்தப்பட்டதுடன், புனித வெள்ளியின் ஆன்மீக முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.










