பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷாவின் பூர்வீக வீட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம், பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லோயர் டிர் மாவட்டத்தின் மாயார் பகுதியில் உள்ள நசீம் ஷாவின் பூர்வீக இல்லத்தில் நேற்று (11) அதிகாலை சுமார் 1:45 மணியளவில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் இந்த வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது, நசீம் ஷா வீட்டில் இல்லை. அவர், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக ராவல்பிண்டியில் பாகிஸ்தான் அணியுடன் தங்கியுள்ளார்.
வீட்டில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
பொலிஸார் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தாக்குதலுக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள சி.சி.ரி. வி கமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பி ஓடிய மற்ற குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியும் ஆரம்பமாகியுள்ளது.










