தங்காலை – சீனிமோதரயில் உள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை (22) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவரின் இரு மகன்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தங்காலை பகுதியில் மூன்று லொறிகளில் இருந்து 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியான 284.94 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், வீட்டிற்குள் இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, ரி -56 ரக துப்பாக்கி மற்றும் ஐந்து பொதி செய்யப்படாத கைத்துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்படும் ‘உனகுருவ சாந்த’ என்ற பாதாள உலக உறுப்பினருக்கு சொந்தமானது என்பது பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேநேரம், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்த நபர், இலங்கையில் சாந்தவின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் உள்நாட்டு இயக்குநராக நம்பப்படும் ‘உனகுருவ துசித’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், உயிரிழந்த நபரின் இரண்டு மகன்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று லொறிகளின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று (23) தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை தங்காலை பொலிஸ் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆரம்பித்துள்ளது.










