யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய பிரஜைகள் இருவரிடம் தலா 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சூரியன் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.
காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கு முன்னெடுக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பலில் பயணிக்கவிருந்த இலங்கை மற்றும் இந்திய பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் 09 இலங்கையர்களும், 17 இந்திய பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தங்கத்தை உடலுக்குள் மறைத்து வைத்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த நிலையில், சுங்க அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனை எடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி சூரியன் தெரிவித்தார்










