“முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குச் சிப்பாய்களால் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிய இளைஞர்களில் ஒருவர், முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, “நீதியான விசாரணை”, “வடக்கு – கிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை நாம் ஆதரிக்கின்றோம். ஹர்த்தால் சொல்லும் செய்தியை ஜனாதிபதி – பாதுகாப்பு அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க கவனத்தில் எடுக்க வேண்டும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“ஐந்து தமிழ் இளைஞர்கள், கடந்த 7ஆம் திகதி முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குச் சிப்பாய்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. தப்பிச் சென்றவர்களில் ஒருவரான, கபில்ராஜ், 9 ஆம் திகதி முத்தையன்கட்டுக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே, என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, “நீதியான விசாரணை”, “வடக்கு – கிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை நாம் ஆதரிக்கின்றோம்.
ஜனாதிபதி – பாதுகாப்பு அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க, இது தொடர்பில் உடன் விசாரணை, தண்டனைக்கு உரிய சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் இதை அடிப்படையாகக் கொண்டு, வடக்கு, கிழக்கின் மேலதிக இராணுவப் பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“இராணுவப் பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்தக் ஹர்த்தால் சொல்லப் போகும் செய்தி. போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவச் சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும். எனவே, அவர்களை தென்னிலங்கைக்குக் கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற இன்ன பிற அபிவிருத்திப் பணிகளில், ஜனாதிபதி – பாதுகாப்பு அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க ஈடுபடுத்த வேண்டும்.
“இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்கவில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மைப் பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்துக் கொண்டு, கேள்வி கேட்கும், ஜே.வி.பி. அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோரின் வாய்ப்புகளையும் ஜனாதிபதி – பாதுகாப்பு அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க மூட வேண்டும்.
“அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றைச் செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்” என நீங்கள்தான் மக்களுக்குக் கூறினீர்கள். அதேயேதான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம்.
அரச இராணுவப் பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்க்கின்றோம். எப்போதும் எதிர்ப்போம். வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடைபெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கையைத் தமிழ் முற்போக்குக் கூட்டணி வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது.” – என்றுள்ளது.










