செம்மணி மனிதப்புதைகுழி குற்றத்துடன் சம்பந்தப்பட்ட பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை கூற தயாராக உள்ளதாக பிரதான குற்றவாளி சோமரத்ன ராஜபக்ஷ தெரிவிப்பு
⦁ யசிஹரன் ராஜகோபால்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுகள் இதுவரை கட்டம் கட்டமாக 39 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 135 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 54 சான்றுப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டு அவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் இலங்கையில் தற்போது பூதாகரமானதாகவும், முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் இராணுவத்தை நெருக்கடிக்குள் தள்ளும் விடயமாக மாற்றம் பெற்றுள்ளதுடன், இந்த மனிதப் புதைகுழி விவகாரம் தற்போது சர்வதேச மட்டத்தில் விவாதிக்கப்படும் விவகாரமாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில், கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி படுகொலை தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை கூற தயாராக உள்ளதாகவும், இந்த குற்றத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகளை தன்னால் அடையாளம் காட்டித்தர முடியும் என்பதையும், இந்த விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவை :
செம்மணி சோதனை சாவடியானது 1990 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழையும் பிரதான சோதனைச்சாவடியாக இருந்ததாகவும், வீதியில் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செம்மணி சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டுவந்த எனது கணவர் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஏனைய ஐவரினதும் பணியாக இருந்ததாக எழுதியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தின் 7 ஆவது படைப்பிரிவின் தலைமை முகாமின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றிய கப்டன் லலித் ஹேவாகே தலைமையிலான புலனாய்வு அதிகாரிகளால் செம்மணி சோதனைச்சாவடியில், விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் இராணுவத்தின் 7 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், அங்கேயே உயிரிழந்தவர்களின் உடல்கள் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்துக்குக் கொண்டுவரப்படுவதாகவும், அங்கு பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக இவ்வழக்கில் தண்டனை பெற்ற ஐவரிடமும் அந்த சடலங்களை புதைக்குமாறு கப்டன் லலித் ஹேவாகேயினால் கட்டளையிடப்படுவதாகவும் அதன் பிரகாரம் எனது கணவர் உட்பட ஐவரால் செம்மணி சோதனைச்சாவடிக்கு அண்மையில் உள்ள பகுதியில் அந்த உடல்கள் புதைக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாக அவர் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிருஷாந்தி குமாரசுவாமி உட்பட அவரது குடும்பம் கைதுசெய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் கொல்லப்பட்டனர்.
மேலும், கிருஷாந்தி குமாரசுவாமி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்ட வேளையில், அவர்கள் கைதான அன்றைய தினம் மாலை 4.00 மணியின் பின்னர் இராணுவத்தின் 7 ஆம் காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் செம்மணி சோதனைச் சாவடிக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கு எனது கணவர் மற்றும் ஏனைய இராணுவத்தினரிடம் கிருஷாந்தி குமாரசுவாமி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவற்றைப் புதைக்குமாறு கப்டன் லலித் ஹேவாகே உத்தரவிட்டதாகவும் சோமரத்ன ராஜபக்ஷ தான் எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்த பின்னரே குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
செம்மணி சோதனைச்சாவடியில் இவ்வாறான நடவடிக்கைகள் சுமார் ஒரு வருடகாலமாக இடம்பெற்றிருக்கின்றன. எனது கணவர் உள்ளடங்கலாக தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐவரும் செய்தது உயரதிகாரிகளால் கொண்டுவந்து தரப்படும் உடல்களைப் புதைத்தமை மாத்திரமேயாகும். மேலும், தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் எனது கணவரால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக 1999 ஆம் ஆண்டு கப்டன் லலில் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் உதயகுமார, பொலிஸ் பரிசோதகர் சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர் அப்துல் ஹமீட் நஸார், லெப்டினன் துடுகல ஆகிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த 6 மாதங்களில் அவர்கள் பிணையில் விடுதலையானதன் பின்னர், அந்த வழக்குக்கு என்ன நடந்தது என எவருக்குமே தெரியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இச்சம்பவத்தின் பின்னர் எனது கணவர் சார்பில் முன்னிலையாவதற்கு ஆர்வம் காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் , போகம்பரை சிறைச்சாலைக்கு வருகைதந்து எனது கணவரை சந்தித்ததாகவும், எனது கணவரிடம் விடயங்களைக் கேட்டறிந்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று அவரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் ஆனால் திடீரென குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டு எனது கணவர் உள்ளிட்ட ஏனைய ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட தினத்திலிருந்து தற்போதுவரை பதவியிலிருந்த ஜனாதிபதிகளுக்கு மேன்முறையீட்டுக் கடிதங்களை அனுப்பிவைத்திருந்தாலும், இன்னமும் எவ்வித தீர்வும் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செம்மணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியமையினால் எனது கணவர் உட்பட சாட்சியாளர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆனால் இதற்கு இடைப்பட்ட காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, வெறுமனே 5 – 10 வருடங்களுக்குக் குறைந்த ஆண்டுகள் மாத்திரம் சிறையில் இருந்த பல குற்றவாளிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் முறையிட தீர்மானம்.
எனது கணவர் சோமரத்ன ராஜபக்ஷ சட்டவிரோதமான முறையில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறையிட எதிர்பார்த்துள்ளோம். ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்குமாறும், அதில் சாட்சியமளிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் எனது கணவர் தெரிவித்துள்ளார். 1999 – 2024 ஆம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்த ஜனாதிபதிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத்தினர் என சந்தேகிக்கப்படும் பலரை விடுதலை செய்திருப்பதுடன் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை விடுதலை செய்வதற்குப் பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார்கள். அவ்வாறிருக்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் எனது கணவர் உள்ளிட்ட ஐவருக்கு மன்னிப்பு வழங்குமாறு உரிய கட்டமைப்புக்களுக்குப் பரிந்துரைக்க முடியாதது ஏன் என்பது புரியவில்லை என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். அது மாத்திரமின்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் அவர் இந்த வாரம் கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாகவும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் தரப்பினர் அழுத்தம் – குற்றவாளியின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும்.
சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எழுதியுள்ள இந்த கடிதத்தை தொடர்ந்து வடக்கின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பலர் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதுடன், சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு செம்மணியில் ஏனைய இடங்களில் புதைக்கப்பட்டுள்ள மனித உடல்களை தோண்டி எடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறீதரன், செம்மணி மனித படுகொலை விவகாரத்தில் பிரதான குற்றவாளியாக மரணதண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ, இப்போது உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இருப்பதாக கூறியுள்ளமை முக்கியமான விடயமாகும். எனினும் இந்த நாட்டுக்குள் உண்மைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதுகின்ற காரணத்தினால் தான் அவர் சர்வதேச விசாரணையைக் கோருகிறார். ஆகவே சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுத்து உண்மைகளை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசாங்கம் அவரை சர்வதேச விசாரணைக்கு தயார்ப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
1999 இல் அகழப்பட்ட 15 உடல் எச்சங்களும், தற்போது செம்மணி சித்துபாத்தியில் அகழப்பட்டுக் கண்டறியப்பட்டிருக்கும் எலும்புக்கூடுகளும் ஒரே குற்றவியல் சூழலுடன் தொடர்புபட்டவையாகும்.

இது குறித்து சட்டத்தரணியும், இலங்கைத் தமிரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன், மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனது தண்டனை விசாரணையின்போது, கிருசாந்தி குமாரசாமி குடும்பம் புதைக்கப்பட்ட இடத்தில் 300 – 400 தமிழ் பொதுமக்கள் புதைக்கப்பட்டிருப்பதை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அந்த சாட்சியத்தின் அடிப்படையில் 1999 இல் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன எனக் கூறியதுடன், அப்போது அகழப்பட்ட 15 உடல் எச்சங்களும், தற்போது செம்மணி சித்துப்பாத்தியில் அகழப்பட்டுக் கண்டறியப்பட்டிருக்கும் எலும்புக்கூடுகளும் ஒரே குற்றவியல் சூழலுடன் தொடர்புபட்டவையாகும் என சுட்டிகாட்டினார்.
1999 இல் அகழப்பட்ட 15 எலும்புக்கூடுகளும் பகுப்பாய்வுக்காக க்ளாஸ்கோ பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரியவந்திருப்பதாகவும், அந்த எலும்புக்கூடுகள் மீண்டும் நாட்டுக்கு உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டு, அதனை சர்வதேச கண்காணிப்பு நடைமுறைகளின் கீழ் இன்று மேற்கொள்ளப்படும் செம்மணி அகழ்வுகளுடன் இணைத்து விசாரணை செய்வதன் ஊடாக மாத்திரமே ஒருங்கிணைந்ததும், தெளிவானதுமான உண்மைத்தேடல் செயன்முறையொன்று உருவாகும் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும், மனித உரிமைகள் பேரவையின் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் கடிதம் மூலம் சுட்டிக்காட்டு.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப் புதைகுழிகளை மீள அடையாளப்படுத்துவற்கும், முறையான கண்காணிப்பை உறுதி செய்வதற்கான சர்வதேச பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னுரிமை வழங்கவேண்டும் என வடக்கு – கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டு வரும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும், மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் ஒன்றிணைந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் இயங்கிவரும் ஏனைய அமைப்புக்களுமாக அனைவரும் இணைந்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை தொடர்பான எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இக்கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வலுவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பவற்றுக்குக் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைத்திருந்த கடிதம் தொடர்பில் மீண்டும் நினைவுபடுத்துகிறோம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப் பணிகளின் போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படவேண்டும். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப்புதைகுழிகளை மீள் அடையாளப்படுத்துவற்கும், முறையான கண்காணிப்பை உறுதிசெய்வதற்கான சர்வதேசப் பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அதிமுன்னுரிமை வழங்கவேண்டும் என்பதையும் அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செம்மணி விடயத்தில் அரசாங்கம் தடைகளை விதிக்கவில்லை.

செம்மணி விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த விடயம் குறித்து அரசாங்கம் எந்தவித குறுக்கீடுகளும், தலையீடுகளும் செய்யவில்லை. செம்மணியில் அகழ்வுப்பணிகள் சரியாக முன்னெடுக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல இதற்கு முன்னர் நாட்டில் இருந்த இராணுவ தலையீடுகளோ அல்லது புலனாய்வு பிரிவின் தலையீடுகளோ இப்போது பிரயோகிக்கப்படவில்லை. ஆகவே அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் என தெரிவித்தார்.










