வவுனியா மாநகர சபைக்குட்பட்ட தாண்டிக்குளம் மாடு வெட்டும் தொழுவத்தையும், இறைச்சிக் கடைகளையும் மூடுமாறு இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என வவுனியா மாநகர சபை முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகர சபை முதல்வரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஞாயிறு தினமான இன்று (நேற்று) மாநகர சபையின் கோரிக்கையினை ஏற்று வவுனியா வர்த்தகர்கள் தங்களுடைய வியாபார நிலையங்களை மூடி பணியாளர்களுக்கு விடுமுறையினை வழங்கியுள்ளனர். எமது கோரிக்கையினை ஏற்று ஒத்துழைப்பு வழங்கிய மாநகரத்தின் வர்த்தகப் பெருமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு சபை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேபோல் தனியார் கல்வி நிலையங்களும் மூடப்பட்டு தமது ஒத்துழைப்பினை வழங்கியிருக்கின்றன. எனவே அது சார்ந்த கல்விச் சமூகத்திற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இது கல்வி நிலையங்களின் வருமானத்தை வீழ்ச்சியடையச் செய்வதற்கான ஒரு செயற்பாடு அல்ல.
மாறாக மாணவர்களிற்கு அறநெறிக் கல்வியை ஊட்டி அதனுடன் கலை, கலாசாரம் தொடர்பான விடயங்களிலும் அவர்கள் முன்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, தற்போது பிரச்சினையாகியுள்ள எமது சபைக்குட்பட்ட மாட்டுத் தொழுவத்தையும் இறைச்சிக் கடைகளையும் நாங்கள் ஒரு போதும் மூடவில்லை. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை மின்சாரம் தடைப்பட்ட போதும் சனிக்கிழமை சபையின் ஒத்துழைப்புடன் மாடுகள் வெட்டப்பட்டு கடைகளுக்கு இறைச்சி அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் மறுநாள் ஞாயிற்றுகிழமை எந்தவித அறிவித்தலும் இல்லாமல் தொழுவத்தையும், இறைச்சிக் கடைகளையும் அவர்களாக மூடியுள்ளனர். நாங்கள் அதனை மூடுமாறு எந்தவித உத்தியோகபூர்வ உத்தரவையும் இன்று வரை பிறப்பிக்கவில்லை. என்பதை எமது மாநகர மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த செயற்பாடு மாட்டிறைச்சி தேவையுடைய மக்களை குழப்பும் விதத்திலும் இங்கு ஒரு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாகவே அவர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் கிழமைகளில் நடைபெறவுள்ள சபைக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும். அன்றைய அமர்வில் எமது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளமுடியாத பல விடயங்களும் வெளிவரும் என்றார்.










