கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி அறகலைய போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவரசகாலச்சட்ட விதிமுறைகளினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (23) தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2 ஆவது விதிமுறையின் கீழ் பிரகடனப்படுத்திய அவசரகால சட்ட விதிமுறைகள் தன்னிச்சையானதும் அதிகாரமற்றதுமான செயற்பாடென பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் யசந்த கோடகொட உள்ளிட்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன், லிபரல் இளைஞர் இயக்கம் மற்றும் மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் அதாம் லெப்பே ஆசாத், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலுடன் பணிபுரியும் ஒரு சர்வதேச மனித உரிமை ஆர்வலரான லக்ஷ்மணன் சஞ்சீவ் ஆகியோர் இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.










