ஹட்டன் – சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது மாணவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (08) மாலை நண்பர்களுடன் சிங்கமலைப் பகுதிக்கு புகைப்படம் பிடிக்க சென்றபோதே தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த நாவலப்பிட்டி, தொலஸ்பாகை பிரதேசத்தைச் சேர்ந்த பாண்டியன் தமிழ்மாறன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடும் பணியினை மேற்கொண்ட போதும் தேடமுடியாத நிலையில் இராணுவம் மற்றும் கடற்படை முகாம் சுழியோடிகளின் உதவியுடன் இன்று (09) தேடிய நிலையில் ஆற்றினுள்ளிருந்து பிற்பகல் சடலம் 2: 30 மணியளவில் சடலமாக மீட்டனர்.
பெற்றோர் வெளிநாட்டில் பணி புரிவதுடன் ஹட்டன் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்து கல்வி கற்று வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










