“யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளுக்கு மாற்றீடான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதை மீறிப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதுவரையான அகழ்வில் 33 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் நிபுணர்கள் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்திய நிலையில் இன்று (நேற்று) பகல் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருப்பதால் அவற்றைச் சரியான விதத்தில் ஆய்வொன்றைச் செய்து தெளிவான விதத்தில் அகழ்ந்து எடுப்பதற்கு நேரம் எடுத்த காரணத்தால் இன்று (நேற்று) புதிதாக என்புத் தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.
செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளுக்கு மாற்றீடான செயற்கை நுண்ணறிவுப் படங்கள் (ஏஐ படங்கள்) சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளியிலும் பரப்பப்படுகின்றன.
இப்படியான பிழையான படங்கள் பகிரப்படுவது குற்றவியல் விசாரணைகளுக்கு இடையூறு செய்வதோடு, உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் உருவ அடையாளங்கள் மாற்றப்படலாம் எனவும், இந்தப் புதைகுழியைத் தவறான விதத்துக்குக் கொண்டுசெல்ல ஓர் உக்தியாக இதனைக் கையாளுகின்றனரா எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, குறித்த போலியான செயற்கை நுண்ணறிவுப் படங்களைப் பகிர்பவர்கள் மீது, நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். ஆகவே, சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செயற்கை நுண்ணறிவுப் படங்களைப் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – என்றார்.