செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப்படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இழிவுபடுத்தி ஊடகங்களில் கதறிய சிங்கள இனவாதிகளுக்கும், கடந்த காலத்தில் பேரினவாத அரசுக்கு முண்டு கொடுத்த தமிழ் குழுக்களும், மனிதப் புதைகுழியில் உள்ள எலும்புக் கூடுகள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார் உடையது எனவும் அத்துடன் சகோதர இயக்கங்களின் உறுப்பினர்களை படுகொலை செய்து புதைத்தவர்களினதும் என ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.
இனவாதி விமல் வீரவன்ச ஊடகத்தின் முன்னால் பொய்யுரைக்கும் போது செம்மணி புதைகுழியில் தாயும் கைக்குழந்தையும் கட்டியணைத்தபடியான எலும்புக்கூடு மற்றும் பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரும் உண்மையை திசை திருப்ப முனைந்த இனவாதிகளுக்கும், கோடரிக் காம்புகளுக்கும் முகத்தில் அறைந்தது போல் ஆதாரம் பதில் வழங்கியுள்ளது.
செம்மணிப் பகுதியில் புதைகுழி ஏற்படுத்தப்பட்ட சமகாலத்தில் அப்பகுதி இராணுவ முகாமில் இருந்த சிப்பாய்கள் சாட்சியாக இருக்கும் போது கடந்த கால அரசுகளின் கைக்கூலிகளும், தென்னிலங்கை இனவாதிகளும் யாரைக் காப்பாற்ற செம்மணிப் மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர்?” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.