திருக்கோணமலையின் கோணேஸ்வரரின் அடையாளமான மான்களை நாம் பாதுகாப்போம் என மாநகர சபை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் யுவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இம்மான்கள் திருகோணமலைக்கே தனித்துவமானவை. அத்துடன் சுற்றுலாப் பயணிகளையும் கவர்கிறது. இம் மான்களுக்கு, வாழிடம் அற்றுப்போவதால் தற்போது குறைந்து வருவது மட்டுமல்லாது வீதி விபத்துக்கள், பொலித்தீன் பாவனை போன்றவற்றாலும் இவற்றின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது.
இவற்றின் வாழ்விடப் பிரச்சினை மற்றும் உணவுப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக கடந்த காலங்களில் நகரசபையினால் மான் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த மான் பூங்காவில் திருகோணமலை புனிதமரியாள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், ரொட்டரி கழகம், எதிர்கால பசுமை உலகம் போன்ற அமைப்புக்களால் பல மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் ரொட்டரி கழகத்தினால் தினமும் போதியளவில் மான்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகின்றது.
இந்த மான் பூங்கா சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவர்ந்து வருகின்றது.
திருகோணமலை நகர சபை கலைக்கப்பட்ட காலத்தில் கௌரவ உறுப்பினர்கள் இல்லாத போது இங்கே நகரின் சட்ட விதிகள் மீறப்பட்டு கடந்த காலத்தில் இந்த இடத்தில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் அங்கு வாழும் மான்களுக்கு இடையூறாக அமைகிறது.
அத்தோடு, அங்கு கட்டாக்காலியாக திரியும் நாய்கள் மான்கள் ஈனும் குட்டிகளை தூக்கி செல்வது வேதனையின், சோகத்தின் உச்சம். ஆகவே அந்த கட்டாக்காலி நாய்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தல் வேண்டும். இதன்மூலம் மான்களின் இன விருத்தியை அதிகரிக்க முடியும்.
இது தொடர்பாக மாநகர சபையில் பூரண ஒத்துழைப்போடு என்னால் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதை கோணேசரின் ஆசியுடன் அறிவிக்கிறேன்.

















