தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் பயணப் பையில் தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் தற்போது பொலிஸ் காவலில் உள்ளார்.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்திற்கு பை ஒன்றில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முயன்ற இரு பெண்கள், கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அதன்படி அந்த பெண்ணின் பையில் T56 வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கான மெகசின் ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த துப்பாக்கி தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட இரு பெண்களும் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 72 மணி நேர பொலிஸ் காவல் உத்தரவு பெறப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் போது, முக்கிய சந்தேக நபரான பெண், அனுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தனது வீட்டில் பணியாற்றும் சமையல்காரர் மூலம் இந்த துப்பாக்கியை தனக்கு வழங்கியதாக கூறியள்ளார்.
இதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சமையல்காரர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பொலிஸார் அரசியல்வாதியை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.