இழுவலைகளை படிப்படியாக நிறுத்த முடியும். இந்திய – இலங்கை மீனவர்கள் தொப்புள் கொடி உறவாக மீன் பிடிக்க இரு நாட்டு அரசாங்கமும் பேசி தீர்வு காண வேண்டும் என இந்திய இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (26.03) இடம்பெற்ற இந்திய – இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசி மகிழ்ந்தோம். அவர்களுடைய கஸ்ர நிலைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய கஸ்ர நிலமைகளையும் நாங்கள் கூறினோம்.
இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை இருந்தது. சுமூகமாக நடைபெற ஏற்பாடு செய்த இலங்கை மீனவ சமாசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
கடந்த 9 வருடங்களுக்கு முன் இரண்டு அரசாங்கங்களும் பேசிய பின் மீனவர் பிரச்சினை பேசப்படவில்லை. 9 வருடங்களில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுவலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
நாங்கள் இந்த இழுவலையை படிப்படியாக குறைப்பதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் ஊடாக சம்மதிக்கின்றோம் எனக் கூறினோம். அடுத்த கட்டமாக ஏனைய மாவட்ட மீனவ அமைப்புக்களையும் ஒன்று திரட்டி இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசாங்கம் உதவியுடன் இதனை பேசி நல்லதொரு தீர்வை அடுத்த கட்டமாக எட்ட முடியும் என பேசியுள்ளோம்.
வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசாங்கம் தமது சட்டத்தின் படி 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் என சிறை வைத்துள்ளார்கள். அந்த மீனவர்களை மனிதபிமான முறையில் விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரமாகவும் தீர்வு காண வேண்டும் என கோரியுள்ளோம்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது அதனை செய்யலாம் என இலங்கை மீனவர்கள் கூறியுள்ளார்கள். நிச்சயமாக இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பேசி இதற்கு ஒரு தீர்வை எட்ட வேண்டும். இந்திய – இலங்கை கடற்பரப்பு மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கச்சதீவு இலங்கைக்கு கொடுத்ததால் கடல் பரப்பு குறைவாக உள்ளது. அதனால் தான் எல்லை தாண்டும் பிரச்சனை ஏற்படுகிறது.
இதில் இந்திய – இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றோம். நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டு அரசாங்கங்களும் இணைநத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது எமக்கு தெரியாது. எங்களுடைய எண்ணம். கச்ச தீவை மீட்பது அல்ல. இரு நாட்டு மீனவர்களும் தொப்புள் கொடி உறவாக அப் பகுதியில் மீன் பிடிக்க வேண்டும். இரு பகுதி மீனவர்களும் பாதிக்காத வகையில் இரு நாட்டு அரசாங்கமும் நல்ல முடிவை எடுக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் எடுப்பார்கள் என நாங்கள் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.