வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு, அடுத்த மாதம் 9ஆம் திகதி (09.04.2025) நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் கோருவது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று செவ்வாய்க் கிழமை (25.03.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாகப்போடப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் விசனம் வெளியிட்டார்.
கிளிநொச்சிக்கு வருகை தந்த காணி ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பில் முறையிட்ட நிலையில், அவர் இந்த விடயத்தை கௌரவ விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்பாசன அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதற்கு அமைவாக எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உயர்மட்ட குழுக் கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவற்றால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாய நிலங்கள், மேய்ச்சல் தரவைகள், குளங்கள், வயல்கள், மக்கள் மீள்குடியமர்வுக்கான காணிகள் என்பன எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் மாவட்ட ரீதியாக விவரங்களை தயாரிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதன்போது அரச காணிகள் மாத்திரமே, ஒதுக்கக் காணிகளாக அரச திணைக்களங்களால் அறிவிக்க முடியும் எனவும் தனியார் காணி எனின் அதனைச் சுவீகரித்தே ஒதுக்க காணிகளாக அறிவிக்க முடியும் என்றும சட்டஏற்பாடு உள்ளபோதும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன அதனைப் பின்பற்றாமல் வர்த்தமானியை வெளியிட்டுள்ளன என ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலஅளவத் திணைக்களத்தின் வரைபடத்துக்கு அமைவாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்தன என்றும், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் அந்தத் திணைக்களங்கள் நேரடியாக தமக்குரியதாக அடையாளப்படுத்தும் காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளன என்ற தகவலும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
வடக்கில் சில மாவட்டங்களில் வனவளத் திணைக்களத்துக்குரிய காணிகள், வனவளத் திணைக்களத்துக்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகள் என்பனவற்றை விடுத்து மக்களின் வயல்காணிகளாக உள்ளவற்றுக்குள்ளும் வனவளத் திணைக்களத்தின் எல்லைக் கல்லுகள் போடப்பட்டுள்ளன என அதிகாரிகள் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினர்.
அதேநேரம் சில இடங்களில் வனவளத் திணைக்களமும், வனஉயிரிகள் திணைக்களமும் ஒரே காணிகளையே தமக்குரியதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
கடந்த ஆண்டு வடக்கின் 5 மாவட்டங்களில் விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கிய காணிகளின் அளவுகளை விட புதிதாக தமது திணைக்களத்துக்கு கோரும் காணியின் அளவு அதிகம் என்றும் ஆளுநரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
வனவளத் திணைக்களத்தால் சில இடங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டபோதும் அங்கு மக்கள் மிக நீண்டகாலமாக வசித்துவருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கான சட்டபூர்வ ஆவணங்களோ, வீட்டுத்திட்ட உதவிகளோ முன்னெடுக்க முடியாத நிலைமை இருப்பதாகவும், அதேபோன்று சட்டபூர்வமான ஆவணங்கள் உள்ள ஒருதொகுதி மக்கள் வர்த்தமானி அறிவித்தலால் தமது வசிப்பிடங்களில் குடியேற முடியாத நிலைமை இருப்பதாகவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
அரச அதிகாரிகள் அபிவிருத்தித் தேவைக்காக காணிகளை விடுவிக்குமாறு வனவளத் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைத்தால் அது நிராகரிக்கப்படும் அதேவேளை, தனியார் முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகளும் வடக்கில் நடைபெறுவதாக அதிகாரிகள் ஆளுநரிடம் குறிப்பிட்டனர்.
இதேநேரம், இந்தத் திணைக்களங்களின் பாகுபாடான செயற்பாடுகள் தொடர்பிலோ அல்லது அந்தத் திணைக்களங்களின் நடவடிக்கைகள் தொடர்பிலோ வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கேள்வி எழுப்பினால், மேற்படி இரண்டு திணைக்களங்களின் உயர் அதிகாரிகளால் அவமரியாதை செய்யப்படுவதாகவும் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டினர்.
இந்த விடயங்களைக் கவனத்திலெடுப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்வரும் 9ஆம் திகதி கலந்துரையாடலுக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் விவரங்களை உரிய வகையில் தயார் செய்யுமாறும், கடந்த காலங்களில் எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் இரு திணைக்களங்கள் தொடர்பிலான விடயத்தை அணுகுவோம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மேலதிக மாவட்டச் செயலர்கள் – காணி, வடக்கு மாகாண காணி ஆணையாளர், பிரதி நில அளவையாளர் நாயகம் – வடக்கு, ஆகியோர் கலந்துகொண்டனர்.



