கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற,வடகிழக்கு பிரிவினை ஏற்படுத்தி பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
கூட்டமைப்பாக உருவாகினால் அது நல்ல கூட்டமைப்பாக இருக்கவேண்டும்.நாங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டவர்கள். ஊழல்,மோசடி,இலஞ்சம்,கொலை,கொள்ளை,கடத்தல்,கப்பம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் நாங்கள். ஆனால் கடந்த காலத்தில் ஒரு கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோர் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதனை உருவாக்கி இருப்பதாக ஊடகங்கள் மூலமாகவும் உங்களது கேள்விகள் மூலமாகவும் நான் அறிந்து கொண்டேன்.
ஆனால் நான் சொல்ல வருகின்ற விடயம் என்னவென்றால் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று கூறப்பட்டிருக்கின்றது. அண்மையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் அந்த நீதிமன்ற தீர்ப்பு சொல்லப்பட்ட விடயத்தை அவ்வாறே கூறுகின்றேன் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. நாங்கள் சொல்லவில்லை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. ஆகவே கூட்டமைப்பு அமைப்பது என்பது சாதாரண விடயமாக இருக்கலாம.; ஆனால் அந்த கூட்டமைப்புக்கு உரியவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.
ஒரு காலத்தில் ஒரு விடுதலை போராட்டம் என்பதனை உரிமையோடு போராடிய ஒரு கட்டமைப்பில் இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தை பிளந்து கொண்டு வந்து அந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் என்று கூட சொல்லுகின்றார்கள் மக்கள். ஆகவே இவ்வாறானவர்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அதுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்று கூறுகின்றார்கள்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்றால் வடக்கு கிழக்கில் தமிழர்கள் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கில் நாங்கள் இணைந்து செயல்படுகின்ற போதுதான் நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருக்க முடியும். மாறாக கிழக்கு என்றும், வடக்கு என்றும், மலையகம் என்றும், மட்டக்களப்பு என்றும், யாழ்ப்பாணம் என்றும் நாங்கள் பிரிந்து செயல்படுகின்ற போது எங்களுடைய பலமான சக்தியை அழிக்கின்ற செயற்பாடாக தான் இருக்கும். ஆகவே கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்று உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர்களின் பலத்தை குறைக்கின்ற அல்லது வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளுகின்ற ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றது.
கடந்த காலத்தில் ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் போட்டி போட்டு அங்கு தமிழ் பிரதிநிதியாக வரவேண்டிய கோடீஸ்வரன் அவர்களின் வெற்றியை தடுத்து அதாவுல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்தியவர் தான் இப்போது இந்த கூட்டமைப்பில் வந்து சேர்ந்திருக்கின்றார். கடந்த காலத்தில் பல்வேறுபட்ட தவறான செயற்பாடுகளில்,அதாவது லஞ்சம் வாங்குகின்ற செயல்பாடுகள் மற்றும் கையூட்டு வாங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களின் கட்சிகள் கூட இதில் இணைந்திருக்கின்றது.
எனவே கொலை,கொள்ளை,கப்பம்,கடத்தல்,காணாமல் ஆக்குதல்,திருட்டு, லஞ்சம்,தரகு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பற்றி மக்கள் அறிவார்கள். எனவே இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்ற கூட்டமைப்பு என்பதை விட பேரினவாத்திற்கு துணை போகின்றவர்கள் எனலாம். கடந்த காலத்தில் பெரும்பான்மை இன பேரிடவாதத்திற்கு துணை போய் அங்கு பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள்,ராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். கடந்த காலத்தில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்,மக்களின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள்,காணாமல் ஆக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று பல்வேறு பட்டவர்கள் இணைந்து செயல்படுகின்ற போது நிச்சயமாக இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அமையும்.
ஆகவே நீதிமன்ற தீர்ப்புகள் சட்ட நடவடிக்கைகள் என்று எல்லாம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது இந்த கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை. இவர்கள் கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.
குறிப்பாக மாதவனை மைலத்தமடு இடங்களில் பெரும்பான்மை இணைத்தவர்கள் அத்துமீறி குடியேறிய போது ஒரு சத்தமும் போடாதவர்கள் தான் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். அது ராஜகா அமைச்சர்களாக இருந்தால் என்ன,பிரதி அமைச்சர்களாக இருந்தால் என்ன மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற போது ஒரு சத்தமும் போடாமல் இருந்து கொண்டு தரகு மற்றும் லஞ்சங்களை பெற்றுக்கொண்டு இருக்கின்றவர்கள் இந்த கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.
ஆகவே மக்கள் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதற்கு வாக்களிக்க கூடாது வாக்களிக்க மாட்டார்கள் என நான் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் நாங்கள் எந்த ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகளில் இதுவரையில் கைச்சாத்திடவில்லை. அவ்வாறு இடம்பெறவும் இல்லை. நான் அறிகின்றேன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக கேட்கின்றார்கள் நாங்களும் தனியாகத்தான் கேட்கின்றோம் எந்தவித ஒப்பந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை.
வடக்கில் அவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுகின்றதா என அறிவித்தாயின் நாங்கள் நிச்சயமாக அந்த சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அங்கு இருக்கின்ற கட்சியின் நிர்வாகத்தோடு தொடர்புடைய செயலாளர்களோடு அல்லது தலைவர்களோடு உரையாடுகின்ற போது அறியலாம் நான் நினைக்கின்றேன். அவ்வாறு கிழக்கில் இடம்பெறவில்லை அவ்வாறான ஒப்பந்தமும் செய்யவில்லை.
வடக்கிலும் குறிப்பாக யாழ் மாவட்ட மாவட்டத்திலும் செய்யக்கூடிய வாய்ப்புகள் இல்லை அவ்வாறு இல்லை என்றால் நான் நினைக்கின்றேன் வன்னி மாவட்டத்தில் அவ்வாறு ஏதேனும் நடைபெற்று இருந்தால் நாங்கள் அதனை கேட்டு தான் அறிய வேண்டும் இதுவரைக்கும் நான் அவ்வாறான விடயத்தை அறிந்து கொள்ளவில்லை.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றபோது நான் நினைக்கின்றேன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரே இடத்தில் சந்தித்தபோது நிழல் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த நிழல் படங்களை வைத்துக்கொண்டு ஒப்பந்தங்கள் செய்ததாக தவறான கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றது. சில சந்தர்ப்பத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கின்ற அடிப்படையில் சந்திப்போம் கைகளை கொடுப்போம் தோளில் தட்டி விட்டு வருவோம் இவ்வாறான விடையங்களை வைத்துக்கொண்டு சிலவேளைகளில் தவறான வதந்திகளை பிறக்கின்ற ஒரு செயல்பாடுகள் காணப்படுகின்றது.
நிச்சயமாக கூறுகின்றேன் அவ்வாறான தமிழரசு கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்த ரீதியாக எதுவும் செய்யவில்லை. இது வெறுமனே ஒரு வதந்தியான செயல்பாடாக தான் பார்க்கின்றேன.; அது நிழல் படம் என்பது கதைக்கின்ற போது கை கொடுக்கின்ற போது சில புரளிகளை ஏற்படுத்துவதற்காக படங்களை பிடித்து போடுவார்கள் அது படம் தானே தவிர அதை எதுவிதமான அர்த்தமும் இல்லாத விடயம்.
பட்டலந்த சித்திரவதை முகாம் என்பது உண்மையில் நடைபெற்ற விடயம் என்பதற்கான ஆதாரம் இப்போது பதிவுகளிலும் பேச்சுக்களிலும் வந்துவிட்டது ஆகவே அதற்குரிய நடவடிக்கைக்கு முன் ஆயத்தமாக வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் இடம்பெற இருக்கின்றது. அந்த விவாதத்தில் நாங்களும் கலந்து கொள்ள இருக்கின்றோம்.
ஆகவே பட்டலந்தையில் சிங்கள இளைஞர்கள் ஜேவிபி இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்று எல்லாம் சொல்லப்படுகின்றது அதேபோன்று 88 89 காலப்பகுதியில் இந்த வேலைகளை செய்தவர்கள் 90 ஆம் ஆண்டு பிரச்சனைக்கு பின்னர் இதே போன்ற சித்திரவதைகள் கரடியினாறு முகாமாக இருக்கலாம் அல்லது கல்லடியாக இருக்கலாம் முறக்கொட்டான்சேனை, நாவலடி, கொன்டவெட்டுவான், சத்ருகொண்டான் போன்ற பல கிராமங்களில் சித்திரவதைகளும் கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும் தாராளமாக நடைபெற்று இருக்கின்றது.
சத்துருக்கொண்டானை எடுத்துக் கொண்டால் ஒரே நாளில் சுற்றி வளைப்பு செய்து கொக்குவில் சத்துருக்கொண்டான் பணிச்சையடி பிள்ளையாரடி போன்ற கிராமங்களை சேர்ந்த 186 அப்பாவி தமிழ் மக்களை அதிலும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இவர்களை எல்லாம் அள்ளிக் கொண்டு சென்று சத்துருக்கொண்டான் முகாமில் அன்று இரவு படுகொலை செய்தார்கள் அதிலும் குழந்தை பிள்ளைகளை அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் கூறிய சாட்சியதின்படி வளைந்து இருந்த முந்திரிகை மரத்தின் மீது அவ்வாறே குழந்தைகளை வைத்து கத்திகளால் துண்டு துண்டுகளாக வெட்டி போட்டதை அவர் கண்டிருக்கின்றார்.
இவ்வாறு எல்லாம் படு மோசமான பாவகரமான செயல்கள் சத்துருகொண்டான் முகாமில் மாத்திரம் அல்ல கிழக்கு பல்கலைக்கழகத்திலும் 180 க்கும் மேற்பட்டவர்கள் அவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்டு நாவலடி முகாமில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே பட்ட லந்தை முகாம் மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் அனேகமான படை முகாம்களில் இவ்வாறான சித்தரவதைகள் இடம் பெற்று இருக்கின்றது எனவே அதற்குரிய நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் செய்தால்தான் அவர்களை நாங்கள் சமத்துவவாதிகள் என்று கூறுவோம். அவர்கள் சமத்துவவாதிகள் என்றால் சட்டத்தின் முன்னிலையில் சிங்களவர்கள் முஸ்லிம்கள் தமிழர்கள் பரங்கியர்கள் மலாயர் அனைவரும் சமம் ஆகவே சட்டத்தின் மூலமாக அப்பாவிகளை பாதுகாக்க வேண்டியதும் குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டியதும் அரசின் கடமை.
ஆகவே பட்டலந்தை முகாம் நியாயத்தின் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது அது போன்று வடக்கு கிழக்கில் இருந்த முகாம்களில் இடம் பெற்ற அனைத்து சித்திரவதைகளும் படுகொலைகளும் காணமலாக்கப்பட்டதும் சந்திக்க வரவேண்டும் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். அதனை நாங்கள் பாராளுமன்றத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருப்போம்.