காணிகளுக்கான தமிழர்களின் உரிமை போராட்டத்தினை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என தென்னிலங்கை மக்களிடம் தையிட்டி காணி உரிமையாளர்கள் கொழும்பில் வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்
உரிமைகளுக்கான போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என ; தென்னிலங்கை மக்களை கேட்டுக்கொள்கின்றோம் என தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களில் ஒருவரான சுகுமார் சாருஜன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நில உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கேட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உட்பட பல அரசாங்கங்கள் எங்கள் நிலங்களை எங்களிடம் தருவதாக உறுதியளித்தன.
ஆனால் இது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இலங்கையின் அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரமே இந்த விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாதமைக்கு காரணம் என நாங்கள் கருதுகின்றோம்.
இவை எங்கள் மூதாதையர்களின் நிலங்கள்,அங்குள்ள பௌத்த ஆலயத்தின் மதகுரு கூட இந்த நிலம் எங்களிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால் அவர் இதனை பொதுவெளியில் தெரிவிக்க தயங்குகின்றார்.
எங்களின் இந்த போராட்டம் சிங்கள மக்களிற்கோ அல்லது பௌத்தமதத்திற்கோ எதிரானது இல்லை.
எங்கள் நிலங்களை மீளப்பெறுவதற்காகவே நாங்கள் போராடுகின்றோம்.
உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என நாங்கள் தென்னிலங்கை மக்களை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
