இலங்கை, என்ற வரலாற்றுச் செழுமையும் பன்முகத்தன்மையும் கொண்ட தீவில், பொது சகாப்தத்திற்கு (கி.மு.) முன்பே, சிங்கள மற்றும் தமிழ் ஆட்சியாளர்களுக்கு இடையே ஏராளமான போர்கள் நடைபெற்று உள்ளது என்பதை, இலங்கை என்ற நாட்டின் வரலாற்று தகவல்களை உள்ளடக்கி, பௌத்த மதத்தை முதன்மைப் படுத்தி, பௌத்த பிக்குகளினால் எழுதப்பட்ட மகாவம்ச குறிப்பிடுகின்றது.
இந்த மோதல்கள், இலங்கையில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இனவாத மோதல்கள் அல்லாமல், ஆளும் அரசர்களுக்கிடையேயான அதிகாரத்திற்கான போர்களாகவே இருந்தன என்பதோடு, பெளத்த மத நூலான மகாவம்சவின் அடிப்படையில், இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் இனங்களின் இருப்பு என்பது 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த இரு சமூகங்களும் முறையே பௌத்தம் மற்றும் இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த வேளையில், கிறிஸ்துவுக்கு பின் 15 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவ சக்திகளின் வருகையினால்,
கிறிஸ்தவ மிஷனரிகளின் நெறிப்படுத்தலில்,இலங்கைத் தீவு கட்டாய மத மாற்றங்களையும் கலாச்சார பாரம்பரியத்தின் அழிவையும் எதிர்கொண்டது என்பதோடு, ஐரோப்பிய கிறிஸ்தவ காலனித்துவ ஆட்சியின் போது, ஐந்து குறிப்பிடத்தக்க சிவன் கோவில்கள் உட்பட பல இந்து கோவில்கள் இடித்து அழிக்கப்பட்டு, உலகவரலாற்றில் தமிழர்களின் கடைசி ராச்சியமான யாழ்ப்பாண ராச்சியம் தகர்க்கப்பட்டு, அந்த யாழ்ப்பாண ராச்சியத்தின் அதிகாரத்துக்குரிய மன்னனான சங்கிலியனும்,
ஐரோப்பிய கிறிஸ்தவ காலனித்துவ ஆட்சியாளர்களினால் கொல்லப்பட்டார்.
இந்த வரலாற்றுக் கொடுமை ஐரோப்பிய காலனித்துவ கிறிஸ்தவ மிஷனரிகளினால் நடந்தேறி அவர்கள் பல நூற்றாண்டுக்கள் இலங்கையை ஆண்டு வெளியேற,அவர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து பின்னரும் கூட, தொடர்ந்து மக்களாட்சியில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களும் நாட்டின் அதிபர்களும், பௌத்த மதத்தையும் சிங்கள பெரும்பான்மையினரையும் முன்னுரிமைப்படுத்தியே ஆட்சி நடத்தினார்கள். இதற்கு பெரும்பாலும் அரசியல் நோக்கங்கள் காரணமாக இருந்தன என்றாலும், இதுவே துரதிர்ஷ்டவசமாக, தமிழ் சமூகத்திற்கு எதிரான இனப் பாகுபாட்டிற்கு வழிவகுத்தது.
இதன் காரணமாக பதட்டங்கள் அதிகரித்து, பல தசாப்தங்களாக, இந்த அரசியல் மற்றும் இனப் பிளவுகள் நீடித்து, இன மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து , மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெரும் போரும் வெடித்தது. இந்தப் போரின் விளைவாக 200,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டு 800,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உலகம் எல்லாம் புலம்பெயர்ந்தார்கள். இந்த வரலாற்று நிகழ்வுகளை நான் இங்கே தற்போது குறிப்பிடுவதன் காரணம் என்னவென்றால்,இலங்கையில் வாழ்ந்து வரும் சிங்கள மற்றும் தமிழ் இனங்களிக்கு இடையே பிளவுகளை உருவாக்குவதற்காக அல்ல, மாறாக மகாவம்சவின் படி இலங்கை என்ற நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களின் நீண்டகால இருப்பை உறுதிப்படுத்தி,
வரலாற்றை அங்கீகரித்து, கடந்த காலத்தைப் புரிந்து கொண்டு, எதிர்காலம் குறித்து சிந்தித்து, அனைத்து சமூகங்களுக்கும் சமமான அங்கீகாரத்தையும் மரியாதையையும் உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆகும். ஆனால் தற்போதும் இலங்கையில் நடப்பது என்னவென்றால் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை தொல்பொருள் துறை தனது செயல்பாடுகளால் நிலங்களை ஆக்கிரமிக்கின்றது. புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் சில புத்த பிக்குகளின் ஆதரவுடன், புத்த விஹாரைகளை கட்டுவதற்காக தமிழர்களின் நிலங்களை அபகரிக்கின்றது.
இதனால் இந்தப் பகுதிகளின் மக்கள் தொகை மற்றும் கலாச்சார நிலப்பரப்பில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.அத்தோடு இலங்கையின் மத மற்றும் தொல்பொருள் கொள்கைகள் குறித்த எனது கவலைகள், முக்கியமாக வரலாற்று, கலாச்சார மற்றும் அரசியல் கேள்விகளை எழுப்புகின்றன.அதாவது 2000 ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையில் இந்து மதத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையிலான உறவு ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்தும், இலங்கையின் பௌத்த வரலாறு மற்றும் கலாச்சார அம்சங்கங்கள் போலவே இலங்கையில் இந்து வரலாறு மற்றும் கலாச்சார அம்சங்கங்கள் நிறைந்திருந்தும்,புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம், தனியாக அமைச்சு இருக்கின்றது
அது இந்து மதம் உட்பட பல மதங்களை மேற்பார்வையிடுகிறது என்றாலும், இந்து விவகாரங்களுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட தனி அமைச்சகம் எதுவும் இல்லை என்பதை,தமிழ் சமூகமும் இந்து அமைப்புகளும் சுட்டிக்காட்டி, நாட்டில் இந்து பாரம்பரியத்தை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தனி அமைச்சகம் தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றன.
அவர்களது கவலைகள் நியாயமானது என்பதற்கு ஏதுவாக தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழும் மற்றும் இந்து பாரம்பரியம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இருக்கும் வரலாற்று தளங்களுக்கான அணுகுமுறையில் இலங்கை தொல்பொருள் திணைக்களம் பெளத்த சார்பு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றது.
அதாவது அந்த தொல்பொருள் திணைக்களத்தின் தொல்பொருள் கொள்கைகள் சிங்கள பௌத்தத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில்,
இந்து வரலாற்று தளங்களை புறக்கணித்து நிராகரிக்கின்றன என்பதோடு,இந்து கோவில்களுக்கு தொல்பொருள் திணைக்களத்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தொல்பொருள் பாதுகாப்பின் கீழ் கோவில்கள் கையகப்படுத்தப்படுகின்றன. வரலாற்று ரீதியாக, பௌத்தம் வருவதற்கு முன்பு, இலங்கையில் தென்னிந்தியாவைப் போலவே இந்து மரபுகளைப் பேணியே மக்கள் வாழ்ந்து வந்தனர்.
பௌத்த நூலான மகாவம்சம், மன்னர் தேவநம்பிய திஸ்ஸ இந்து தாக்கங்களிலிருந்து பௌத்த நம்பிக்கை முறைக்கு மாறியதை ஒப்புக்கொள்கிறது. இதன் காராணமாக பௌத்தம் ஆதிக்கம் செலுத்தும் மதமாக மாறிய போதிலும், இந்து மதம் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது, குறிப்பாக இது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், தமிழ் இந்துக்கள் தங்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து பின்பற்றி வந்தனர் என்றபோதும்,
பல தமிழ் இந்துக்கள் இலங்கையில் இந்து மத வரலாற்று கலாச்சார பங்களிப்புகள் தேசியக் கொள்கைகளில் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள்.
இந்துக் கோயில்கள் இடிபட்டதும், பொதுவாக இந்து மத நிகழ்வுகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததும், அத்தோடு வரையறுக்கப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்த தொல்லியல் துறையில் தமிழகளுக்கான ஒரு பிரிவும்,
பெளத்தத்திற்கு புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம், தனியாக இருப்பதைப் போன்று இந்து மத கலாச்சார விவகாரங்களை கையாள அமைச்சகம் இல்லாமல் இருப்பதும்தமிழ் மக்களுக்கு சிங்கள அரசின் மீது சந்தேகமும் கவலைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஆன்மீகவாதியாகநான் எழுதிய இந்தக் கருத்தின் நோக்கமானது, இலங்கை என்ற நாடு அதன் பன்முகத்தன்மை கொண்ட பெளத்த மற்றும் இந்து மத கலாச்சார வரலாற்றை அங்கீகரித்து மதிக்க வேண்டும் என்ற விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது.
உண்மையிலேயே ஒன்றுபட்ட இலங்கையில் அரச அதிகாரிகள் அனைத்து மத மரபுகளுக்கும் சமமான அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்ற வகையில்,இலங்கையில் பாரம்பரியம் மிக்க இந்து மதமும்,பாரம்பரியம்
மிக்க பௌத்த மதத்தைப் போலவே, மரியாதையையும் பாதுகாப்பையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதை,இந்தக் கட்டுரையின் மூலம், எனது கருத்தாக மட்டுமல்லாது,
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் பூர்வீகத் தமிழர்களின் கருத்தாகவும் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில்,ஒரு இந்து மத ஆன்மீகவாதி என்ற முறையில், இந்த செய்தியை கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் மற்றும் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும்,
அத்தோடு சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களுக்குத் தெரியப்படுத்தி, ஐக்கிய இலங்கையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள என் இந்த கருத்தை உள்வாங்கி, பெளத்த சிங்கள மக்களுக்கு இருக்கும் உரிமையையையும் மரியாதையையும், மகாவம்சவின் படி பெளத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே இருந்த தமிழ் இந்துக்களுக்கும் வழங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
சுவாமி சங்கரானந்தா 🙏

