வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கம், கூட்டுறவு சங்கத்திடம் இரகசியமான முறையில் கடனைப் பெற்று நபர் ஒருவருக்கு தனிப்பட்ட தேவைக்காக வழங்கிய 900000 ஒன்பது இலட்சம் ரூபாய் நிதிக் கடன் மீனவர்களின் எதிர்ப்புக்கு பின் கூட்டுறவு சங்கத்திடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுப்பினர்களுக்கு தெரியாமல் இரகசியமான முறையில் ஒன்பது இலட்சம் ரூபாய் கூட்டுறவு சங்கத்திடம் நிதிக் கடனாக பெற்றுள்ளனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவென கூறி இந்த நிதிக் கடன் கூட்டுறவு சங்கத்திடம் இருந்து பெறப்பட்டது
ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட ஆழியவளை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க அப்போதைய நிர்வாகத்தினர் இரகசியமான முறையில் அதை நபர் ஒருவரின் தனிப்பட்ட தேவைக்காக வழங்கியுள்ளனர்.
சம்பவம் ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியவந்ததையடுத்து பொதுச்சபை கூட்டம் ஒன்றை கூடி கடன் பெற்றதை ஒப்புக் கொண்ட அப்போதைய நிர்வாக உறுப்பினர்கள் அதை வட்டியுடன் மீள கையளிப்பதாக பொதுச்சபைக்கு உறுதியளித்தனர்.
இதன் பிரகாரம் கூட்டுறவுச் சங்கத்திடம் ஆழியவளை நிர்வாகம் பெற்றுக் கொண்ட ரூபா ஒன்பது இலட்சம் நிதிக் கடன் வட்டியுடன் செலுத்தப்பட்டதாக ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் தெரியப்படுத்தியதுடன் அதனை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
