வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்றையதினம் (5) கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் கஸ்ரன் ரோய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின், நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள், சிறப்பு வரவேற்களிக்கப்பட்டு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மற்றும் அணிநடையுடன் நிகழ்வானது ஆரம்பமாகியது.
நிகழ்வின் பிரதம விருந்தினர் நிகழ்வுகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
கல்லூரியின் முதல்வர் கஸ்ரன் ரோய் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி துறையின் விரிவுரையாளர் இளம்பிறையும், சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்கனாதன் (நிர்வாக உத்தியோகத்தர் தீவக வலயம்) செல்வி சி. துஷ்யா (ஆசிரிய ஆலோசகர் தீவக கல்வி வலயம்) ரம்ய ராகுலன் (விளையாட்டு உத்தியோகத்தர் வேலணை பிரதேச செயலகம்) T.R.L.பியசேன (கடற்படை கட்டளை அதிகாரி மண்கும்பான்) உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.
மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வுகள் பிற்பகல் 5.00 மணிக்கு நிறைவுக்கு வந்தது. இதையடுத்து நிகழ்வின் அதிதிகள் உரைகள், பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது பாடசாலையின் அதிபர் தலைமை உரையாற்றுகையில்,
விளையாட்டுத்துறை என்பது வேடிக்கைக்கான அல்லது பொழுதுபோக்குக்கான ஒன்றல்ல. அது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஒன்றிணைவையும் அவர்களுக்கிடையிலான உணர்வுகளை புரிந்து கொள்ள வைப்பதற்குமான ஒரு பெறுமதி மிக்க ஊடகமாகும்.
இதை எமது மாணவர்கள் தமக்கானதாக்கி வெற்றிகாண வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அண்மைய காலங்களில் விளையாட்டு துறையில் மாணவர்களின் பங்களிப்பு வீழ்ச்சிகண்டு வருவது வேதனையளிக்கின்றது. இது ஒரு பாரதூரமான பெறுபோறாகவே பார்க்கப்பட வேண்டும்.
அதனடிப்படையில் விளையாட்டுத்துறையில் மாணவர்களின் பங்களிப்பை வலுப்படுத்த பாடசாலை சமூகத்தினருடன் பெற்றோரின் பங்களிப்பும் மிக அவசியம்.
இதேநேரம் தீவகத்தில் உள்ள பாடசலைகளுள் கல்வியுடன் விளையாட்டு துறையிலும் பிரகாசித்து வரும் ஒரு பாடசாலையாக எமது பாடசாலை இருக்கின்றது. ஆனாலும் அதை முழு அளவில் சாதிப்பதற்கு பல இடர்பாடுகளும் இருக்கின்றன.
இந்த இடர்பாடுகளை கடந்து செல்வதற்கு மாணவர்களின் மனமுவர்ந்த பங்களிப்பும், அதற்கான பெற்றோரின் முழுமையன ஊக்கமும் தேவையாக இருக்கின்றது.
அவ்வாறான ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எமது முயற்சியாக இருக்கின்றது. எமது அந்த முயற்சிக்கு இனிவரும் நாட்களில் கிடைக்கும் என்றும் நம்பிகை இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




