வவுனியாவில் வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள்: நடவடிக்கை இல்லை என மக்கள் தெரிவிப்பு
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதி மற்றும் ஏ9 வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், இதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக நகரை சூழ பல பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் கல்வி நடவடிக்கைகளுக்காக இவ் வீதிகளினை பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பல்வேறு தேவைகளிற்காக இவ்வீதியினை பயன்படுத்தும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் இக்கட்டாக்காலி மாடுகளால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், இக்கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்குள்ளாகும் நிலையும் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் இது குறித்து கால்நடைகளை பராமரிப்பாளர்கள் கவனம் எடுக்க வேண்டும் அல்லது வவுனியா நகரசபையானது கால்நடைகள் பராமரிப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் பாலகிருபனிடம் கேட்கப்பட்ட போது,
தொடர்ச்சியாக கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வருட ஆரம்பத்திலும் நகரில் கட்டாக்காலியாக திரிந்த 70 மாடுகள் பிடிக்கப்பட்டதுடன் அம்மாடுகளின் உரிமையாளர்களிற்கு தண்டப் பணமும் அறவிடப்பட்டிருந்தது என தெரிவித்தார்.


