தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான நிலைப்பாடு சகலருக்கும் தெரியும். காலாகாலமாக இந்தக் கட்சி ஆரம்பிக்கபபட்டதில் இருந்து அரசியற் திர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டி வந்துள்ளது. எனவே இதில் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை புதிதாக முன்வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் அரசாங்கத்திடம் வலிந்து கோருவது நீங்கள் மக்களுக்காக வழங்குவதென வாக்குறுதி அளித்த உங்களிடத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்ற அரசியற் தீர்வைக் காலம் தாழ்த்தாது முதலில் மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்;கையில்,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது. இங்கு முக்கியமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது பற்றி நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னர் இதே இடத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்தத் தேர்தல் முறையின் கீழ் தனித்தனியாகப் போட்டியிடுவது பற்றி உத்தேச தீர்மானமொன்றை மற்றைய கட்சிகளுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். அந்த அடிப்படையில் தனித்துப் போட்டியிட்டாலும் நாங்கள் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான புரிந்துணர்வொன்றை மற்றைய கட்சிகளுடன் ஏற்படுத்த முடியுமா என்ற விதத்திலும் ஆராய்ந்தோம்.
எல்லா மாவட்டங்களிலும் நிலைமை ஒரே மாத்திரியாக இருக்காது. அந்த நிலைமைகளுக்கேற்றால் போல் அந்ததந்த மாவட்டங்களில் சற்று வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாள முடியும் என்றும் தீர்மானததிருக்கின்றோம். அது சம்மந்தமாக மற்றைய தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைமைத்துவங்களோடு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தலைவருக்கும், செயலாளருக்கும் அனுமதியை வழங்கியிருக்கின்றது. இது தொடர்பில் நாங்கள் மேலும் கூட வேண்டுமாக இருந்தால் அரசியற் குழுவினுடாக தீர்மானங்களை மேற்கொள்ளலாம் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் சம்மந்தமாகப் பேசப்பட்டது. பலருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிலர் ஏற்கனவே கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கின்றார்கள். கட்சிக் கெதிராக வெவ்வேறு தரப்பினருடன் போட்டியிட்டவர்கள் தொடர்பிலான அறிக்கை செயலாளரூடாக சேகரிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஒவ்வெரு மாவட்டத்திற்கும் அந்தப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கெதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கான ஏதுக்கள் இருப்பின் அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
கட்சிக் கெதிராக, கட்சி முடிவுகளுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதர்கள் சம்மந்தமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. பலருக்கு விளக்கம் கோரல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒழுக்காற்று குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் எமது கட்சித் தலைவருக்குக் கொடுத்த கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது. இது சம்மந்தமாக கடந்த மத்திய குழுவிலே ஏழு போர் கொண்ட குழுவினைத் தீர்மானித்திருந்தோம் இன்று அந்தக் குழுவிலே சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாணக்கியன் இந்தக் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்து சிறிநேசன் அவர்களின் பெயரை முன்மொழிந்திருந்தார். அந்த ஏழு பேர் கொண்ட குழு மத்திய குழுவின் பின்னரும் கூடியது.
தமிழ் மக்களுக்கு எவ்வாறான அரசியல் திருத்தம் வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியும், தங்களுக்கு மக்கள் ஆணை இருப்பதாக இந்த அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நாடுபூராகவும் அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். வடக்கிலும் தமிழ் மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாகச் சொல்லுகின்றார்கள். ஆனால் அண்மைக் காலமாக அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் குறிப்பாக அரச பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தற்போது பொருளாதாரப் பிரச்சனை தான் முக்கியமானது அதனைத் தான் நாங்கள் கவனிப்போம் அரசியலமைப்பு பற்றி பின்னர் பார்த்தக் கொள்வோம் என்று கூறியிருக்கின்றார். வேறு சிலர் மூன்று வருடங்களின் பின்பே அரசியலமைப்பு பற்றி பேசலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.
இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த நாட்டின் பிரதான பிரச்சினை தமிழ்த் தேசியப் பிரச்சனை. வேறு எந்தப் பிரச்சனை சம்மந்தமாகவும் இந்த நாட்டிலே முப்பது ஆண்டுகள் யுத்தம் நடைபெறவில்லை. பொருளாதாரப் பிரச்சனைக்கு அடிகோலியாக இருப்பதும் இந்தத் தமிழ்த் தேசியப் பிரச்சனையே. எனவே இதனை நாங்கள் விட்டுவிட்டு பொருளாதாரப் பிரச்சனையை அவர்கள் முதலில் கவனிப்போம் என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே நாங்கள் அரசாங்கத்திடம வலிந்து கோருவது நீங்கள் மக்களுக்காக வழங்குவதென வாக்குறுதி அளித்த உங்களிடத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்ற அரசியற் தீர்வைக் காலம் தாழ்த்தாது முதலில் மக்களுக்கு முன்வைக்க வேண்டும். உங்களிடத்தில் அரசியற் தீர்வு இருக்கின்றதென்று சொல்லுகின்றீர்கள். அதனை காலம் தாழ்த்தாது நீங்கள் முன்வையுங்கள்.
தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான நிலைப்பாடு சகலருக்கும் தெரியும். காலாகாலமாக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அரசியற் தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டி வந்துள்ளது. எனவே இதில் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை புதிதாக முன்வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனைத் தீர்ப்பதற்கு எங்களுக்கு தெரியும் என்றசொல்லுகின்ற அரசாங்கம் காலம் தாழ்த்தாது உங்களிடம் இருக்கும் வரைபை முன்வைக்க வேண்டும் என்பதே எங்களது அழுத்தமான வேண்டுகோள் என்று தெரிவித்தார்.