ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படு கொ லையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த பரிந்துரையை தற்காலிகமாக இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்கு கடிதம் மூலம் இன்று வியாழக்கிழமை (13) அறிவித்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டமை மற்றும் அவரது குறிப்பேடு காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி பரிந்துரை செய்திருந்தார்.
கடிதத்தின்படி, முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, முன்னாள் கல்கிசை குற்றப் பிரிவு OIC SI திஸ்ஸசிறி சுகதபால மற்றும் முன்னாள் DIG பிரசன்ன நாணயக்கார ஆகியோர் விடுவிக்கப்படலாம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பரிந்துரை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த அரசாங்கம், இந்த விடயத்தை ஆராய்ந்து பரிந்துரையை ஆய்வு செய்வதாகக் கூறியது.
இந்நிலையில், குறித்த பரிந்துரையை தற்காலிகமாக இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.