நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு முரணாக இவர்கள் செயற்பட்டிருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான ஒரு விண்ணப்பத்தினை செய்யுமாறு நீதிமன்றம் எங்களிற்கு அறிவுரை வழங்கி இருக்கின்றது என தமிழர் விடுதலைக் கூட்டணி மீதான வழக்கு தொடர்ந்த மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகசபை ரவீந்திரன் தெரிவித்தார்.
வவுனியா நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் மார்ச் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை கூட்டம் சட்ட ரீதியற்றது என தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்களான சுதாகரன் மற்றும் சூ.சூரியபிரபாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் (28.01) இந்த வழக்கானது வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. கடந்த முறை எதிர்த்தரப்பினராகிய வீ.ஆனந்தசங்கரி உட்பட ஏனையோர் சார்பாக தோன்றிய சட்டத்தரணி வழக்காளிகளால் கோரப்பட்ட நிவாரணங்களை வழங்குவதில் தங்களுக்கு எவ்விதமான ஆட்சேபனைகளும் இல்லை என்று தெரிவித்திருந்தார்கள். அத்தோடு இவ்வழக்கை சமாதானமாக தீர்த்துக்கொள்ள வேறு ஒரு தினத்தையும் கேட்டிருந்தனர்.
மேலும், சமாதனத்திற்காக கோரியிருந்தாலும் கூட, சமாதானத்திற்கு முன்னரான தினமே இன்னுமொரு சட்ட விரோத கூட்டத்தினை கூட்டி அதில் சில தீர்மாணங்களை எடுத்ததுடன், சில உறுப்பினர்களையும் கட்சியிலே சேர்த்திருந்தனர். குறித்த நடவடிக்கையும் சட்டவிரோதமானது. ஏன்எனின், நீதிமன்றத்தால் இடைக்கால கட்டளை வழங்கப்பட்டிருந்த போதும் அதனை மீறி தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிராளிகளினால் குறித்த கூட்டம் நடாத்தப்பட்டிருந்தது.
குறித்த கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் சட்டவிரோதமானது எனக் கோரி அதனையும் இரத்துச் செய்யக்கோரி நீதிமன்றத்தில் கேட்டிருந்தோம். நீதிமன்றமானது ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால கட்டளைக்கு எதிரான வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் செயற்பட்டமையால் குறித்த கட்சியின் பொதுச்சபை கூட்டமானது, சட்டரீதியற்றது என்றும், இங்கே நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு முரணாக இவர்கள் செயற்பட்டிருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான ஒரு விண்ணப்பத்தினை செய்யுமாறு நீதிமன்றம் எங்களிற்கு அறிவுரை வழங்கி இருக்கின்றது. மீண்டும் இவ்வழக்கானது விசாரணைக்காக ஏப்ரல் 30ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களான மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி கனகசபை ரவீந்திரன் மற்றும் கீர்த்தனன் ரவீந்திரநாதன் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



