ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை. சர்வசன வாக்குரிமைக்கு வரும் போது வடக்கு – கிழக்கு மக்கள் இதனை உணர்ந்து எதிர்க்க வேண்டும். அவ்வாறு ஒற்றையாட்சி அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், சட்டத்தரணிகளான காண்டீபன், சுகாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கமானது அறுதிப் பெருமபான்மையுடன் உள்ளது. இந்த அரசாங்கம் மக்கள மத்தியில் தனது இருப்பை தக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டியுள்ளது. அதனடிப்படையில் விரைவாக ஒரு அரசியலமைப்பை கொண்டு வர வாய்ப்புள்ளது. அறுதிப் பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்.
வடக்கு – கிழக்கு ரீதியில் 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் தேசியம் என்ற அடிப்படையில் 10 பேர் இருக்கின்றோம். குறைந்த பட்சம் இந்த அரசாங்கம் கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தேசியம் பேசுகின்ற 10 பேராவது எதிர்க்காவிட்டால் தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இரு நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும். அதன் பின் நாம் தேசியம் பேசி பயனில்லை.
குறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து 3 அரசியலமைப்பு சீர்திருத்தங்களை எமது தமிழ் தலைமைகள் எதிர்த்து வந்துள்ளனர். அதன் காரணமாகவே தமிழ் தேசிய இனப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை என்ற நிலை சர்வதேச சமூகம் மத்தியில் உள்ளது. நாம் புதிய அரசியலமைப்பை தமிழ் தேசிய கட்சிகள் ஏற்றுக் கொண்டால் 76 வருடமாக தமிழ் தலைமைகளும், விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செய்த அத்தனை தியாகங்களும் வீணாகிவிடும்.
எனவே, தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்த்து வடக்கு – கிழக்கு தமிழர் தேசம் என அங்கீகரிக்கப்பட்ட, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு அரசியலமைப்பை கோர வேண்டும். நாடு பிரிக்கப்படாது அது வழங்கபடுமாக இருந்தால் சமஸ்டி ஊடாக மட்டுமே அதனை வழங்க முடியும். எனவே அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும்.
அத்துடன், ஒற்றையாட்சி அரசியலமைப்பு நடைமுறைக்கு கொண்டு வந்தால் அதனை சர்வசன வாக்குரிமைக்கு விட வேண்டும். இதன் போது வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை உணர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும். தமிழ் தேசிய கட்சிகள் மீது உள்ள வெறுப்பால் பாடம் புகட்ட வேண்டும் என கடந்த தேர்தல்களில் வேறு கட்சிகளுக்கும், குழுக்களுக்கும் வாக்களித்து இருந்தாலும் கூட, அரசியலமைப்பு விடயத்தில் ஒன்றுபட வேண்டிய தேவை உள்ளது. இது எமது அடிப்படை உரிமைப் பிரச்சனை. அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதன்பின் கட்சிகள் தமிழ் தேசியம் என்ற பெயரை வைப்பதாலும், தேசியம் பேசுவதாலும் எந்த பயனும் இல்லை. நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன். அதன் பின் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனசனமும் இல்லை. 76 வருட போராட்டம் தோல்வி கண்டதாக முடியும். இந்த ஆபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.


