வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் மாணவர்களை சில பாடங்களுக்கு B5 கொப்பி பயன்படுத்துமாறு ஆசிரியர்கள் வற்புறுத்துவதாக பெற்றோர்களிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து வவுனியா தெற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு வினவியபோது, அவ்வாறு எவ்வித சுற்று நீரூபங்களும் வெளியிடப்படவில்லை. பாடசாலைகளில் மாணவர்களை ஆசிரியர்கள் B5 கொப்பி பயன்படுத்துமாறு வற்புறுத்த முடியாது என்று மேலும் தெரிவித்தார்.
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பெற்றோர்கள் பெருமளவு நிதியைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய பொருளாதார நிலையில் அரச பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் மாணவர்களை விலைகூடிய B5 கொப்பிகளை ஒரு சில பாடங்களுக்கு பயன்படுத்துமாறும், ஒவ்வொரு கலரில் கவர் போடுமாறும் பிரபல்யமான பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறிவருவதால் பெற்றோர்களுக்கு மேலதிகமான சுமைகளும், செலவுகளும் இதனால் ஏற்படுகின்றது. எனினும் கிராமப்புறப்பாடசாலைகளில் இவ்வாறு எவ்விதமான நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.