யாழ்ப்பாணம் – வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் திரு. சகாதேவன் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அக் குத்தகையையும் அமைச்சரவை பத்திரம் ஊடக இரத்து செய்யவுள்ளதாகவும், பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கு இடம் பெற்ற ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அங்கு உரை நிகழ்த்திய கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.
திக்கம் வடிசாலையை மீள இயங்குவது தொடர்பான கலந்துரையாடல் திக்கம் வடிசாலையில், பனை தென்னை வள கூட்டுறவு சங்க கொத்தணியின் தலைவர் தலைமையில் நேற்றையதினம் (18) இடம்பெற்றது.
இதில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், யாழப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரும் பதிவாளருமான திரு.திருலிங்கநாதன், யாழ். மாவட்டத்தில் உள்ள ப.தெ.வ.அ.கூ.சங்கங்களின் சமாச தலைவர்கள், பொதுமுகாமையாளர், பிரதிநிதிகள், வலிகாமம், வடமராட்சி தென்மராட்சி ஆகிய கொத்தணிகளின் தலைவர்வர்கள், பொதுமுகாமையாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், அனைத்து பனை தென்னை கூட்டுறவு சங்களினது தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள், திக்கம் வரணி வடிசாலை தலைவர், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



