ஸ்கொட்லாந்து நாட்டில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாண்ட்ரா சாஜு என்ற 22 வயது பெண் ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பர்க்கிலுள்ள ஹெரியாட் – வோட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அன்று முதல் அவரை காணவில்லையென அந்நாட்டு பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர் கடைசியாக அப்பகுதியிலுள்ள ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு சென்றது அங்குள்ள சிசிரிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த காட்சிகளையும் அவரைப் பற்றிய குறிப்புகளையும் வெளியிட்ட பொலிஸார் அவரைக் கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும், அந்த தேடுதல் முயற்சியில் தன்னார்வலர்களும் இணைந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 27ஆம் திகதி அன்று காலை 11 மணியளவில் எடின்பர்க்கிலுள்ள நியூபிரிச் எனும் கிராமத்திலுள்ள ஆற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பின்னர், அங்கு சென்று அந்த சடலத்தைக் மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அது காணாமல் போன சாண்டிராவுடையது தான் என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கேரளாவிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு ஸ்கொட்லாந்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் சந்தேகப்படும்படியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லையென அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது.