வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடற்தொழில் சங்கங்களுக்கு இரண்டு படகுகள் இயந்திரத்துடன் இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் ஊடாக
மணற்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டு உரித்துடைய பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
இந்நிலையில் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்தில் நடைபெற்ற பயனாளிகள் தெரிவு கூட்டம் தன்னிச்சையானதென அப்பகுதி மீனவர்கள் சிலர் ஊடகங்களிடம் நேற்று 15.12.2024 தெரிவித்தனர்.
கலந்துரையாடல் நடைபெற்ற அன்று மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து வெள்ளம் வந்தமையினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் இருந்தும் அதில் 50 க்கும் குறைவானவர்களே பங்கு கொண்டனர்.
பலருக்கு கலந்துரையாடல் நடைபெறுவது தெரியாது. இரண்டு இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் அங்கத்தவர்களுக்கான பொதுக் கூட்டம் என்றே ஒட்டப்பட்டது. ஆனால் தன்னிச்சையாக சிலரை அழைத்து அன்றைய தினமே இரு பயனாளிகளை தெரிவு செய்துள்ளார்கள்.
உண்மையில் வறுமை வரையறைக்குள் அதிகமான மீனவர்கள் வாழ்கிறார்கள் அவர்களில் பலர் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆழியவளை பிரதேசத்திற்கு பொறுப்பான நீரியல்வள திணைக்கள அதிகாரி தனக்கு நேரம் இல்லை என்று கூறி அன்றைய தினமே தெரிவை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார். ஆகவே கூட்டத்திற்கு சென்றவர்களை வைத்து தெரிவை மேற்கொண்டுள்ளனர்.
படகு இன்றி தெப்பம் மூலம் தொழில் செய்யும் மீனவர்கள் இருக்கும் போது நீரியல்வளத் திணைக்கள அதிகாரி கடற்தொழிலாளர் சமாசத்துடன் இணைந்து தன்னிச்சையான தெரிவை மேற்கொண்டுள்ளார்கள். இந்த தெரிவை எதிர்த்து பலர் கையொப்பமிட்டுள்ளார்கள்.
உடனடியாக ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கம் அங்கத்தவர்கள் அனைவருக்கும் அறிவித்து மீண்டும் ஒரு கலந்துரையாடலை அறிவித்து நீதியான முடிவை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.